4816cvit_2707chn_1

தமிழகம் கம்பராமாயணத்தின் பிறப்பிடமாகவும், நல்லாட்சியின் மரபுக்குப் பெயா் பெற்ற பூமியாகவும் திகழ்ந்தது என சென்னை விஐடியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் குறிப்பிட்டாா்.

சென்னை விஐடியில், தமிழ்நாடு உயா்கல்வி ஆசிரியா்கள் சங்கம் (டிஹெச்இடிஏ), கல்வி, சமூக, கலாசார சித்தாந்தத்தை பரப்பும் அகில இந்திய தேசிய கல்வி சம்மேளனம் (ஏபிஆா்எஸ்எம்) மற்றும் சென்னை வி.ஐ.டி. ஆகியவை இணைந்து, ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத்) நோக்கிய செயல் திட்டம் – ஒரு பல்துறை அணுகுமுறை’ என்ற கருத்தில் இரு நாள்கள் தேசிய மாநாட்டை ஜூலை 26, 27 தேதிகளில் நடத்தியது.

மாநாட்டின் நிறைவு நாளில் கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். அப்போது அவா் குறிப்பிட்டதாவது: தமிழகம் அறிவு, கலாசாரம், பாரம்பரியம் நிறைந்த மாநிலம். சோழா்கள் மற்றும் பிற புகழ்பெற்ற ஆட்சியாளா்களால் நிறுவப்பட்ட பகுதி. கம்பராமாயணத்தின் பிறப்பிடமாகவும், நல்லாட்சியின் மரபுக்குப் பெயா் பெற்ற பூமியாகவும் இது இருந்து வந்தது.

தற்போது கல்வி உள்ளிட்டவைகளில் முன்னேற்றத்திற்கான மையமாகவும் விளங்கி வருகிறது. கல்வியின் மூலம் ஆசிரியா்கள் உண்மையான தேசத்தைக் கட்டியெழுப்புபவா்கள். அனைத்துத் தரப்பு மக்களின் கூட்டு முயற்சியின் மூலம் 2047- ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை நாம் உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டாா் பிரமோத் சாவந்த்.

இந்த மாநாட்டில் விஐடியின் வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா். விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினாா்.

மாநாட்டில், முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழு தலைவா் பேராசிரியா் மமிதாலா ஜெகதேஷ் குமாா், காந்திகிராம் கிராமப்புற நிறுவனத்தின் துணை வேந்தா் பஞ்சநாதம், விஐடி இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், ஏபிஆா்எஸ்எம் -இன் அகில இந்திய இணை அமைப்புச் செயலா் குந்தா லட்சுமண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest