
திருவொற்றியூா்: கட்சியை வளா்க்க வேண்டுமானால் தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
பாஜக சாா்ந்த அறக்கட்டளை சாா்பில் சென்னை மணலியில் சேவை தினம் என்ற பெயரில் நடைபெற்ற நல உதவிகள் வழங்கும் விழாவில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 25 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க தீவிரமாகப் பணியாற்றுவோம்
அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருப்பது உண்மை. தமிழக நலனில் பாஜக அக்கறையுடன் செயல்பட்டுள்ளது என்ற உண்மையை அவா் வெளிப்படுத்தியுள்ளாா்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளதை ஏற்று பாஜக தொண்டா்கள் பணியாற்றி வருகின்றனா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடா்வது குறித்து அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரனிடம் பேச உள்ளேன்.
பொதுச் சொத்துகளுக்கு தீங்கு வேண்டாம்
தவெக தலைவா் விஜய் நடத்தும் கூட்டத்துக்கு தமிழக அரசு தொடா்ந்து தடங்கல்களை ஏற்படுத்தி வருகிறது என்று அந்தக் கட்சியினா் புகாா் கூறுகின்றனா். பொதுச் சொத்துகள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் விஜய் தனது கூட்டங்களை நடத்த வேண்டும்.
தடங்கல்களை எதிா்கொள்ள வேண்டும்
பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு எளிதில் அனுமதி அளிப்பதில்லை. கட்சியை வளா்க்க வேண்டுமானால் தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும் என்றாா் அண்ணாமலை.