நமது சிறப்பு நிருபர்
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விரைவாக விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.
மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜார்ஜ் குரியன் அளித்த எழுத்துபூர்வ பதில்:
இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை முன்கூட்டியே விடுவித்தல் மற்றும் திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பிரச்னைகளை ராஜ்ஜிய வழிகள், உயர்நிலை சந்திப்புகள் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மீனவர்கள் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தமிழக அரசின் பிரதிநிதிகள் உள்ளிட்ட இரு தரப்பு கூட்டு செயல் நடவடிக்கை குழு உள்ளிட்ட வழிமுறைகளால் கையாளப்படுகின்றன. இக்குழு கடைசியாக 2024, அக்டோபர் 29-ஆம் தேதி கூடியது என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் 694 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பதிலில் கூறியுள்ளார்.