
பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,
“பள்ளிக்கல்வித் துறை தன்னுடைய இலக்கை தாண்டி உழைத்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை கட்டடங்கள் சாதியை ஒழிக்கும் கட்டடங்கள்.
அன்புக் கரங்கள் மூலம் பல சிறப்பான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. 2,715 பட்டதாரி ஆசிரியர்கள் எங்களது பள்ளிக்கல்வித் துறை குடும்பத்தில் இணைந்துள்ளனர். கல்வி, சுகாதாரத்தை இரு கண்களாக கருதி முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத் தேர்வு வந்துவிடும். எங்களுக்கு பொதுத் தேர்தல் வந்துவிடும். நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும்.
நான் அரசியல் பேசவில்லை. அறிவு சார்ந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காகவே இங்கு பேசுகிறேன்” என்று தெரிவித்தார்.