deer-1

மான் எனும் பொதுப்பெயரிலும், இலக்கியங்கள் குறிப்பிடும் மான்களின் பெயரிலும் தமிழ்நாடு எங்கும் பரவலான ஊர்கள் அழைக்கப்படுவது ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் பால்கரை வே.சிவரஞ்சனி நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர் சிவரஞ்சனி கூறுகையில்

இரலை மான்

”மான் எனும் பொதுப்பெயரில் மானூர், மானுப்பட்டி, மான்கானூர், மன்கரட்டுப்பாளையம், மாங்குளம், மாஞ்சேரி, மாங்காடு, மான்குண்டு போன்ற மானின் பொதுப் பெயரில் 161 ஊர்களும், இலக்கியங்கள் குறிப்பிடும் மான் இனத்தின் பெயரில் 80 ஊர்களுமாக மொத்தம் 241 ஊர்கள் தமிழ்நாடு முழுவதும் மானின் பெயரில் உள்ளன.

தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மானின் கொம்புகளைக் கொண்டு அவற்றை இரலை, கலை என இரு இனமாகப் பகுப்பர். இரலை இனத்தின் கொம்புகள் உள்துளை, கிளைகள் இன்றிக் கெட்டியாக இருக்கும். கீழே விழுந்து புதிய கொம்பு முளைக்காது.

உள்துளையுடன் கிளைகள் கொண்ட கலை இனத்தின் கொம்பு, குறிப்பிட்ட கால வெளியில் கீழே விழுந்து புதிதாக முளைக்கும்.

இரலை இனத்தில், இரலை, நவ்வி, மரையான், கலை இனத்தில் உழை, கடமான் ஆகிய வகைகள் உள்ளன. இதன் பெயர்களில் தமிழ்நாடெங்கும் ஊர்கள் உள்ளன. கொம்புடன், கருமையான உடல் கொண்ட இரலையின் ஆண் மானை தேவாரம் ‘கருமான்’ என்கிறது.

பல வகை மான்கள்
பல வகை மான்கள்

இப்பெயரில் கார்மாங்குடி, கருமங்காடு, கருமாங்குளம், கருமாபாளையம், கருமஞ்சிறை, கருமாபுரம், கருமாந்துறை, கருமனூர் போன்ற பல ஊர்கள் உள்ளன.

முறுக்கிய கொம்புகளால் இதை முறுக்குமான் எனவும், புல்வெளிகளில் வாழுவதால் புல்வாய் எனவும் அழைத்தனர். முறுக்கோடை, முருக்கம்பட்டு, முருக்கம்பாடி, முருக்கன்குட்டை, முருக்கன்பாறை, புல்வாய்க்குளம், புல்வாய்க்கரை, புல்வாய்பட்டி போன்ற பெயர்களில் ஊர்கள் உள்ளன.

நவ்வி மான் பெயரில் ஊர் இல்லை. பசுவைப் போல் இருப்பதால் மரையான் எனப்படும் இதன் பெயரில் மரைக்குளம், மரையூர், மறைநாடு போன்ற ஊர்கள் உள்ளன.

கலை இனத்தில், கிளையுள்ள கொம்புகளுடன் இருக்கும் உழைமானின், உடலில் புள்ளிகள் காணப்படுவதால் இதை கலைமான், புள்ளிமான் எனவும் அழைப்பர். கலைக்குறிச்சிவயல், கலைகுடிபட்டி, கலையன்விளாகம், கலையனூர், கலையூர், கலைக்குளம், உழையூர், உழக்குடி, புள்ளிமான் கோம்பை, புலிமான்குளம் என ஊர்கள் உள்ளன.

ஆய்வாளர் சிவரஞ்சனி
ஆய்வாளர் சிவரஞ்சனி

கிளையுள்ள கொம்புடன், உடலில் புள்ளி இல்லாத கடமான் பெயரில் கடமான்குளம், கடமாகுட்டை, கடமனூர், கடமான் கொல்லை, கடமாங்குடி, கடமஞ்சேரி, கடத்திக்குட்டை போன்ற பல ஊர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மான் இனங்களின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஊர்கள் அமைந்திருப்பது தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சிக்குச் சான்றாக உள்ளது என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest