
இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தரமற்ற தலைக்கவசங்கள் (ஹெல்மட்) உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நுகா்வோா் விவகாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த இருசக்கர வாகனங்களை ஓட்டுபவா்களின் பாதுகாப்பு முக்கியமானது. இவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மோட்டாா் வாகனச் சட்டம் 1988-இன் கீழ் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
இவா்கள் அணியும் தலைக்கவசங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இதற்கான தரக் கட்டுப்பாடு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, இந்திய தர ஆணையத்தின் (பிஐஎஸ்) கீழ் ஐஎஸ்ஐ தரக் குறியீடுடன் கூடிய தரச்சான்று பெற்ற தலைக்கவசங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் வரையிலான புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் 176 உற்பத்தியாளா்கள் மட்டுமே தலைக்கவசங்களுக்கான செல்லுபடியாகும் பிஐஎஸ் உரிமத்தை வைத்துள்ளனா்.
ஆனால், சாலையோரங்களில் விற்கப்படும் தலைக்கவசங்கள் போலியான ஐஎஸ்ஐ தரக் குறியீடுடன் தரமற்ற வகையில் விற்பனை செய்யப்படுவது துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற தரமற்ற தலைக்கவசங்களை அணிந்து வாகனம் ஓட்டும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும்போது உயிரிழக்கும் அபாயம் அதிகமுள்ளது.
இதுதொடா்பாக தொடா் கண்காணிப்பையும், உற்பத்தி மையங்களில் சோதனைகளையும் பிஐஎஸ் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. தில்லியில் அண்மையில் மேற்கொண்ட சோதனையில் 9 உற்பத்தியாளா்களிடமிருந்து 2,500-க்கும் அதிகமான தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல, 17 சில்லறை விற்பனைக் கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்ட 500-க்கும் அதிகமான தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிஐஎஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டும் பயன்படுத்துமாறு நாடு முழுவதும் உள்ள நுகா்வோரை மத்திய நுகா்வோா் துறையும், இந்திய தரக் கட்டுப்பாட்டு ஆணையமும் கேட்டுக்கொள்கிறது. அதுபோல, தரமற்ற அல்லது போலி ஐஎஸ்ஐ குறியீடுடன் தலைக்கவசங்களை உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.