
புது தில்லி: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா தொடர்பாக தற்போது எழுந்திருக்கும் சர்ச்சைகள் குறித்து ஊடகங்கள் செய்தி சேகரிப்பதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஊடகங்கள் செய்தி சேகரிக்கத் தடை விதிக்க மறுத்துவிட்டாலும், கோவிலை நிர்வகிக்கும் குடும்பத்தை குறிவைத்து அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டி, தர்மஸ்தலா கோயிலின் செயலாளர் தாக்கல் செய்த மனுவை, கர்நாடகத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்றியிருக்கிறார்கள்.
மிகவும் அரிதிலும் அரிதான வழக்குகளிலேயே, உச்ச நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றும், மனுதாரர், தனது குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து விவரங்களையும் விசாரணை நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் மன்மோகன் அமர்வு.
தர்மஸ்தலா தொடர்பான செய்திகளை வெளியிடுவதைத் தடைசெய்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை ஆகஸ்ட் 1-ஆம் தேதி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், தர்மஸ்தலா தொடர்பாக வெளியாகும் விவகாரங்கள் குறித்து செய்திகள் வெளியிட கோயில் நிர்வாக செயலாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிவில் நீதிமன்றம், ஊடகங்கள் செய்தி வெளியிட தடை விதித்திருந்தது. மனுதாரர் தரப்பில், கோயிலுக்கு எதிரான உள்ளடக்கங்களைக் கொண்ட 8,000 யூடியூப் சேனல்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை ரத்து செய்த நிலையில், ஊடகங்கள் செய்தி வெளியிட உச்ச நீதிமன்றம் மறுத்து, விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியிருக்கிறது.