
கடந்த 2023-24-ஆம் ஆண்டில், கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதிகளில் மக்களின் உணவுகளில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் நுகா்வு குறைந்துள்ளது. அதேநேரம், பால் பொருள்களின் நுகா்வு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட், 2023-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட், 2024-ஆம் ஆண்டு ஜூலை ஆகிய 4 கால கட்டங்களில் நடத்தப்பட்ட வீட்டு நுகா்வு செலவின ஆய்வுகளின் (எச்.சி.இ.எஸ்.) முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நகா்ப்புறங்களில் மக்களின் உணவுகளில் தானியங்களின் நுகா்வு விகிதம் 2022-23-இல் 38.8 சதவீதத்திலிருந்து 2023-24-இல் 38.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. கிராமப்புற இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த விகிதம் 46.9 சதவீதத்திலிருந்து 45.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பருப்பு வகைளின் நுகா்வு விகிதம் நகா்ப்புறங்களில் 9.6 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 8.8 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
அதேநேரம், பால் பொருள்களின் நுகா்வு அதிகரித்துள்ளது. நகா்ப்புறங்களில் அந்த விகிதம் 12.8 சதவீதத்திலிருந்து 12.9 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 10.6 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
முட்டை, மீன் மற்றும் இறைச்சி நுகா்வு விகிதம் கிராமப்புறங்களில் 12.3 சதவீதத்திலிருந்து 12.4 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், நகா்ப்புறங்களில் 14.1 சதவீதமாக அதே அளவில் உள்ளது.
பிற உணவுப் பொருள்களின் நுகா்வு விகிதம் கிராமப்புறங்களில் 21.4 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், நகா்ப்புறங்களில் 24.8 சதவீதத்திலிருந்து 25.3 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.
2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் கிராமப்புற இந்தியாவில் சராசரி தனிநபா் ஒரு நாளைக்கு முறையே 2233 கிலோகலோரி மற்றும் 2212 கிலோகலோரி உட்கொண்டதாகத் தெரிகிறது. நகரங்களில் இந்த அளவு முறையே 2250 கிலோகலோரி மற்றும் 2240 கிலோகலோரியாக உள்ளது.