
23.07.1999. நெல்லை மாவட்டத்தைத் தாண்டி, மாஞ்சோலை என்ற பெயர் தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறிமுகமான நாள். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்திய பேரணியின் போது காவல் துறை நடத்திய தடியடியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
மூன்று மாதங்கள் பிடித்தம் செய்த அரைநாள் சம்பளத்தை திரும்ப வழங்கிடுவது, அது தொடர்பான போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட 653 தொழிலாளர்களை விடுதலை செய்தல், கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்று பல்வேறு முக்கியத் தலைவர்கள், 3000க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட பேரணி தாமிரபரணி ஆற்றின் கரை அருகே கொக்கிரகுளத்தில் அமைந்திருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கிக் கிளம்பியது.

மனு கொடுக்க வந்த மக்கள் எல்லா பக்கமும் சுற்றி வளைக்கப்பட்டு காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையால் தாக்கப்பட்டனர். காவல் துறை நடத்திய தடியடியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தாமிரபரணி கரையில் சுற்றி வளைத்து நடத்திய காவல்துறையின் கொடூரத் தாக்குதலை “தமிழக ஜாலியன் வாலாபாக்” என்று அடுத்து வந்த நாட்களில் பத்திரிகைககள் தலையங்கம் எழுதின.
அப்பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் இன்றைய முன்னணி தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான மாரி செல்வராஜ். அன்று அவருக்கு வயது 15. தனது நேரடி கள அனுபவத்தினை 2012ல் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற 25 பக்க கதையாக எழுதினார். நெஞ்சை உறையவைக்கும் ரத்த சாட்சி அது.
ஜீலை -23
தங்களின் உரிமைக்காக பெரும் அதிகாரத்தையும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் ஆணவத்தையும் எதிர்த்து போரிட்டு இன்னுயிர் நீத்த எம் மாஞ்சோலை புரட்சியாளர்களுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன். pic.twitter.com/y3uLIaLQCF— Mari Selvaraj (@mari_selvaraj) July 23, 2025
மாஞ்சோலை: கூலி உயர்வுப் போராட்டம்; 17 பேரின் உயிரைக் காவு வாங்கிய தாமிரபரணி படுகொலை!
தமிழக வரலாற்றில் நடந்த பெரும் கரும்புள்ளியாக அமைந்த அந்த தாமிரபரணி படுகொலையின் நினைவு தினம் இன்று. இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ், “ஜூலை -23 தங்களின் உரிமைக்காக பெரும் அதிகாரத்தையும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் ஆணவத்தையும் எதிர்த்து போரிட்டு இன்னுயிர் நீத்த எம் மாஞ்சோலை புரட்சியாளர்களுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

“கம்பெனிக்காரங்களுக்கு நாங்க கூலிக்கான நம்பர், அரசியல்வாதிகளுக்கு வெறும் ஓட்டுக்கான நம்பர்!” – manjolai documentary film – Vikatan