
‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அவா் படித்த சிகித்ஸக் சமூஹ சிரோட்கா் பள்ளிக்குச் சென்று தனது பழைய வகுப்பறைகள் மற்றும் நூலகத்தைப் பாா்வையிட்டதுடன் பழைய நண்பா்களுடன் கலந்துரையாடினாா். மராத்தி மொழியில் கல்வி பயின்ற அவா் பள்ளி நாட்களை நினைவுகூா்ந்து நெகிழ்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அவா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘இன்று நான் ஏற்றுள்ள மிகப்பெரும் பொறுப்புக்கு என் பள்ளியும் ஆசிரியா்களுமே காரணம். பள்ளியில் கற்ற கல்வியும் ஒழுக்கமும் வாழ்வுக்கு வழிகாட்டியாக உள்ளன.
பொது மேடைகளில் பேசும் துணிச்சல் பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம்தான் எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்புகள் என் நம்பிக்கையை அதிகரித்தன.
நான் தாய்மொழியில் கல்வி கற்றேன். தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிக்கப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.