
சுரின்: தாய்லாந்து – கம்போடியா இடையே நடைபெற்று வரும் ராணுவ மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, எல்லை பகுதியில் வசிக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இடத்தை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர். தாய்லாந்து எல்லையில் இருந்து 1,38,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தாய்லாந்தின் சுரின் மாகாண எல்லையில் உள்ள தா மியூன் தோம் எனும் இந்து கோயலை மையமாக வைத்து இந்த எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த கோயில், தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கம்போடியா கூறி வரும் நிலையில், தாய்லாந்து அது தங்கள் நாட்டுக்கு உரியது என உரிமை கோரி வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்து ராணுவ மோதல்கள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றன.