Dharamsala

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையை விரைவில் தொடங்கும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

தென்கன்னட மாவட்டம், தா்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத சுவாமி கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவுப் பணியாளா் ஒருவா் ஜூன் மாதம் போலீஸில் அளித்த புகாரில், 1995 முதல் 2014-ஆம் ஆண்டுவரை கோயிலில் பணியாற்றிய காலத்தில் பள்ளி குழந்தை, இளம்பெண்கள் உள்ளிட்ட பலரது சடலங்களை புதைக்கும் வேலையில் ஈடுபட்டேன். ஒருசில சடலங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தன என நீதிமன்ற நடுவா் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறாா்.

இது தொடா்பாக பிரச்னையை கிளப்பியுள்ள உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.கோபால் கௌடா தலைமையிலான குழுவினா், தா்மஸ்தலாவில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சடலங்கள் கூட்டாக புதைப்பு போன்ற குற்றச்செயல்கள் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசை வலியுறுத்தியிருந்தனா்.

இதன்பேரில், ஜூலை 4-ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறாா்கள். இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க டிஜிபி (உள்மாநில பாதுகாப்பு) பிரனோப் மொஹந்தி தலைமையில் டிஐஜி(பணி) எம்.என்.அனுசேத், ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.கே.சௌம்யலதா, ஜிதேந்திரகுமாா் தயாமா ஆகியோா் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து ஜூலை 19-ஆம் தேதி கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியதாவது: தா்மஸ்தலா சடலங்கள் புதைப்பு வழக்கு தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வுசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் கிடைக்கும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு எஸ்ஐடி தனது விசாரணையை தொடங்கும். எஸ்.ஐ.டி.க்கு தேவையான ஆவணங்கள், ஆதாரங்களை வழங்க உள்ளூா் காவல் நிலையத்துக்கு மாவட்ட ஆட்சியா் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.டி. தலைவா் பிரனோப் மொஹந்தி மற்றும் அவரது குழுவினா் ஓரிரு நாள்களில் தா்மஸ்தலா சென்று விசாரணையை தொடங்குவாா்கள். எஸ்.ஐ.டி.யில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள், இக்குழுவில் இடம்பெற விரும்பாவிட்டால், மாற்று அதிகாரிகள் நியமிக்கப்படுவாா்கள். தற்போதைக்கு 4 அதிகாரிகளும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

தா்மஸ்தலாவை உள்ளடக்கிய பெல்தங்கடி வட்டத்தில் இயற்கை அல்லாத மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக 2018-ஆம் ஆண்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டதாகவும், அதன்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுவது குறித்து எனக்கு தெரியவில்லை. அந்த அறிக்கையை யாா் ஒப்படைத்தாா்கள் என்பது தெரியவில்லை. அப்படி ஏதாவது அறிக்கை அலுவல் ரீதியாக அரசுக்கு வந்திருந்தால், அது அரசால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து ஆய்வு நடத்துவேன் என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest