
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியில் உள்ள மக்கள் குடிநீருக்காக அங்கு உள்ள கிணற்று நீரையே நம்பியிருந்தனர். தற்போது கிணற்று நீர் சுகாதாரமானதாக இல்லை. அந்த நீரைக் குடித்ததால் தோல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமலை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் குடிநீர்த் தேவைக்காக மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஒன்று கடந்த மார்ச் மாதத்தில் அங்குக் கட்டி முடிக்கப்பட்டது. மேல்நிலை தொட்டிக்கான வேலைகள் எல்லாம் முடிந்தாலும் இன்னமும் மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் குடிநீருக்காகப் பக்கத்து ஊர் வரை சென்று தண்ணீர் எடுத்துவருவதாக வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது பற்றி ஊராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அங்கு வசிக்கும் ராஜவேல் பேசும் போது, “கிணற்று நீர் மிகவும் உப்பு கரிக்கும். அதனைக் குடிப்பதால் நிறைய நோய்கள் வருகின்றன. இதுவரை 20 பேர் தோல் நோய்களாலும், 15 சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்னைகளால் குடிப்பதற்கு மட்டும் பக்கத்து ஊருக்கு வண்டியில் சென்று ஒரு தடவைக்கு 2 குடங்கள் என இரண்டு முறை தடவை சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். அந்த ஊர்க்காரர்கள் தண்ணீர் பிடித்த பின்புதான் நாங்கள் பிடிக்க வேண்டும். சில சமயங்களில் நாங்கள் தண்ணீர் பிடிக்கும் முன்பே நின்று விடுகிறது.
சில நாள்களில் வெறும் குடங்களுடன்தான் திரும்பி வருகிறோம். வண்டி இல்லாதவர்கள் இந்தத் தண்ணீரையே குடிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த மேல்நிலை தொட்டி பயன்பாட்டிற்கு வந்தால் எங்களுடைய குடிநீர் பிரச்னை முடிவுக்கு வரும்” என்றார்.
மேல்நிலை தொட்டி செயல்பாட்டிற்கு வராததது குறித்து வட்டாட்சியர் செல்வராஜ் மாணிக்கத்திடம் விளக்கம் கேட்டோம். “இன்னும் ஒரு வாரத்திற்குள் மேல்நிலை தொட்டியில் குடிநீர் கொண்டு வருகிறேன்” என்று உறுதியளித்துள்ளார்.