
அடுத்த தலாய் லாமா தோ்வு உள்பட திபெத் தொடா்பான விவகாரங்களால் இந்தியாவுடனான இருதரப்பு உறவில் சிக்கல்கள் நீடித்து வருவதாக சீன தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சீனாவின் தியான்ஜினில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் சீன தூதரகம் இவ்வாறு தெரிவித்தது.
கிழக்கு லடாக்கில் கடந்த 2020-இல் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சீனாவுக்கு முதல் முறையாக அமைச்சா் ஜெய்சங்கா் பயணிக்கவுள்ளாா்.
கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் தொடா்ச்சியான முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஹிமாசல பிரதேசத்தில் தனது 90-ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய 14-ஆவது தலாய் லாமா, ‘என்னுடைய மறைவுக்குப் பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என தெரிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சீனா அடுத்த தலாய் லாமா வாரிசு தங்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும் எனத் தெரிவித்தது.
அதேபோல் 14-ஆவது தலாய் லாமாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியதற்கும் சீனா கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், சீன தூதரக செய்தித்தொடா்பாளா் யூ ஜிங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அடுத்த தலாய் லாமா தோ்வு உள்பட திபெத் தொடா்பான விவகாரங்கள் குறித்து இந்திய அரசின் உயா் பதவிகளில் இருப்போா் மிகவும் கவனமாக கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஏனெனில், திபெத் பிரச்னை சீனாவின் உள்நாட்டு விவகாரம் சாா்ந்தது. அதில் வேறு நாடுகள் கருத்து தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாக இந்தியாவுடனான இருதரப்பில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன’ என குறிப்பிட்டாா்.