
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கின்றன. ஆளும் திமுக, `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை தொடங்கி `உடன்பிறப்பே வா’ என்ற நிர்வாகிகள் சந்திப்புவரை தேர்தலுக்கு முழு ஆயுதமாகிக்கொண்டிருக்கிறது.
பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்
தேர்தல் பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கட்சி ரீதியாக சில மாற்றங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது திமுக தலைமை. கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் 16 பேரை அதிரடியாக மாற்றியது. இதில் ஏற்கனவே பதவி பறிக்கப்பட்ட மஸ்தான், அப்துல் வகாப் போன்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதேபோல, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மேயர் தினேஷ்குமார் போன்றவர்களுக்குப் புதிதாக வாய்ப்பும் வழங்கப்பட்டது. இதற்குப் பின் திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடியின் பதவி பறிப்பு போன்ற அதிரடி மாற்றங்களையும் செய்தது திமுக தலைமை. மதுரையில் கூட தேர்தலுக்காக மாவட்ட அளவில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
தற்போதைய நிலையில் திமுக-வில் 72-ஆக இருந்த கழக மாவட்டங்கள், தற்போது 76 மாவட்டங்களாக இருக்கின்றன. இன்னும் அதிகமான தொகுதிகளைக் கொண்ட சில மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் எண்ணத்திலிருந்தது திமுக தலைமை. கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாவட்ட பிரிப்பு பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் எழுந்திருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
மீண்டும் எழுந்த பேச்சு!
மாவட்ட பிரிப்பு விவகாரம் குறித்து அறிவாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “புதிய மாவட்ட பிரிப்பு விவகாரத்தில் மற்ற அனைவரையும் விட மிகுந்த ஆர்வம் காட்டுவது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தரப்புதானாம். புதிதாக மாவட்டம் பிரித்தால், தனது ஆதரவாளர்களை மாவட்டச் செயலாளராகக் கொண்டுவர முடியும் என்று கணக்குப் போடுகிறது உதயநிதி தரப்பு. தற்போதைய நிலையில் சென்னையில் ஆறு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் இருவர் மட்டுமே உதயநிதியின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார்கள்.
அதேநேரத்தில், சேகர்பாபு, மா.சு போன்றவர்களிடம் ஐந்துக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களைப் பிரித்தால், அங்கே தனக்கான ஆட்களை மாவட்டச் செயலாளராகக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறார்கள். தற்போதைய நிலையில் சென்னை மாவட்ட பிரிப்பு குறித்து துணை முதல்வர், முதல்வர் தரப்பிடம் பலமுறை சொல்லி விட்டாராம். ஆனால், அந்த கோரிக்கைக்கு முதல்வர் தரப்பு ஓகே சொல்வதாக தெரியவில்லையாம்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சென்னை மாவட்டத்தைப் பிரித்து புதிய ஆட்களைக் கொண்டுவந்தால் அது தேர்தலில் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற யோசனையில் இருக்கிறது முதல்வர் தரப்பு.
இந்த விவகாரம் குறித்து உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறது திமுக தலைமை. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரிக்கப் பேச்சுவார்த்தை ஆரம்பம் ஆகியிருக்கிறது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு என்று இரண்டு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை நான்காக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் ஒரு மாவட்டத்தை இளைஞரணி துணை செயலாளராக இருக்கும் அப்துல் மாலிக் பெற உதயநிதி தரப்பு மூலம் காய் நகர்த்துகிறார்களாம்.. அதுபோல, மீதமிருக்கும் மற்றொரு மாவட்டமும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரான படைப்பை மனோகரனுக்குச் செல்லவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.. மாவட்ட பிரிப்பு குறித்து தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தான் நடந்து கொண்டிருக்கிறது. தலைவர் எடுக்கும் முடிவுதான் இறுதி” என்கிறார்கள்.