
தெற்கு திரிபுரா மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் இன்று(ஜூலை 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை இடைவிடாது பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை அடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
முஹுரி ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை விட (15.70 மீட்டர்) அதிகமாகப் பாய்ந்து, கரையின் இருபுறமும் வெள்ளத்தில் மூழ்கியது.
திங்கள்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழை காணமாக பெலோனியா மற்றும் சாந்திர்பஜார் துணைப்பிரிவுகளில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
118 குடும்பங்களைச் சர்ந்த 289 பேர் 10 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெற்கு திரிபுரா மாவட்ட நீதிபதி முகமது சஜாத் தெரிவித்தார்.
வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் சிவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் மாணிக் சஹா மாவட்டத்தில் வெள்ள நிலைமை குறித்து விசாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் தெற்கு திரிபுரா மாவட்டத்திற்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ மற்றும் கோமதி மற்றும் செபாஹிஜாலா மாவட்டங்களுக்கு புதன்கிழமை ‘மஞ்சள் எச்சரிக்கை’ வெளியிட்டுள்ளது.