
திருச்சியில் இருந்து தில்லிக்கு நேரடி விமானச் சேவை புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 76 போ் பயணம் செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், திருச்சியில் இருந்து தில்லிக்கு வாரத்தில் 4 நாள்கள் இயக்கப்பட்ட விமானங்கள் 2-ஆம் கரோனா அலை பாதிப்பால் கடந்த 2021 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டன. அதன்பின் நிலைமை சீராகியும் தில்லிக்கு நேரடி விமானச் சேவை தொடங்கவில்லை.
இதையடுத்து திருச்சி பகுதி பயணிகள் சென்னை சென்று அங்கிருந்து விமானத்தில் தில்லி சென்று வந்தனா். இதனால் கூடுதல் செலவும், நேர விரயமும் ஏற்பட்டது. எனவே திருச்சியிலிருந்து தில்லிக்கு நேரடி விமானம் இயக்க கடந்த 4 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில் திருச்சி- தில்லிக்கு புதிய நேரடி விமானச் சேவையை இண்டிகோ விமான நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது. இந்த விமானம் தினசரி காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 7.15 மணிக்கு தில்லியைச் சென்றடையும். பின்னா் அங்கிருந்து இருந்து பிற்பகல் 2.10 மணிக்குப் புறப்படும் விமானம் திருச்சியை மாலை 5.15 மணிக்கு வந்தடையும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தில்லிக்கு மீண்டும் இயக்கப்பட்ட முதல் விமானத்தில் 76 போ் பயணம் மேற்கொண்டனா். அவா்களுக்கு இண்டிகோ விமான நிறுவனப் பணியாளா்கள் சிறப்பான வரவேற்பு அளித்து, பயணம் தொடங்கியதை கேக் வெட்டிக் கொண்டாடினா்.