66790b09259e4

கூரை இல்லாத கோயில்

கூரையும் கோபுரமும்தான் கோயிலின் அழகு. ஆனால் உறையூரில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியின் கோயிலுக்குக் கூரையே கிடையாது. அன்னை வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள்.

எத்தனையோ பேர் அந்தக் கோயிலுக்குக்கூரை போட முயன்றனர். ஆனால் அம்பிகை அவற்றை ஏற்க மறுத்து சூரியனும் சந்திரனும் தன்னை எப்போதும் வழிபட ஏதுவாக கூரை இல்லாமலே கோயில்கொண்டாள்.

இந்த அன்னையிடம் வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும். வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். யார் இந்த வெக்காளி என்று கேட்பவர்களுக்கு வரலாற்று ஆசிரியர்கள் சொல்லும் பதில், ‘இவளே சோழர்களின் குலதெய்வம் கொற்றவையின் வடிவம்’ என்கிறார்கள்.

முற்கால சோழர்களின் தலைநகரமாக மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த விண்ணகரமாக விளங்கிய இந்த ஊரில் வெக்காளி கோயில்கொண்ட வரலாறு அற்புதமானது.

வெக்காளி அம்மன் கோயில் வரலாறு

சாரமாமுனிவர் உறையூரில் செவ்வந்தி தோட்டத்தை பராமரித்து வரும் காலத்தில், அந்த மலர்களை அரசனுக்காக எடுத்து சென்றுவிட்டான் பிராந்தகன் எனும் வணிகன்.

முனிவர் மன்னனான வன்பராந்தகனிடம் முறையிட அவன் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கோபமான சாரமாமுனிவர் தாயுமான சுவாமியிடம் முறையிட்டார்.

ஈசன் கோபமாகி மேற்கு நோக்கித் திரும்பி உறையூரையும் அங்கிருந்த மன்னன் அரண்மனையும் மண் மழை பொழிய வைத்து அழித்தார்.

இதனால் வீடிழந்த மக்கள், சோழர்களின் காவல் தேவியான கொற்றவையை சரண் அடைய, அவள் இந்த ஊர் மக்களின் காவலுக்காக இங்கே வெட்ட வெளியில் எழுந்தருளி மக்களைக் காத்தாளாம்.

அன்று அவள் அமர்ந்த இடத்திலேயே இன்னும் அருள்பாலித்துக் கொண்டு மேலே விமானமோ விதானமோ இல்லாமல் இருந்து வருகிறாள் என்கிறது கோயில் புராணம்.

மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எடுப்பித்த பத்தினிக் கோட்டமே இப்போது வெக்காளி கோயிலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் வெக்காளி, ‘கண்ணகி’யே என்று கூறுவதும் உண்டு.

கருணை மழை பொழிபவள் வெக்காளி

அன்னை உக்கிரமாக வீர ஆசனத்தில் தீ சுவாலையுடன் நாகமும் கொண்ட கிரீடமும் சிவந்த அதரங்களும் கொண்டு விளங்குகிறாள். உடுக்கை, பாசம், சூலம் ஏந்தி அசுரனை மிதித்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

உக்கிர ரூபம் என்றால் பார்த்ததும் பயம் வர வேண்டுமே… இல்லை பக்தியோடு அவளைப் பார்த்தால் ஆதித் தாய் அவள் என்பதை உணர முடியும். பயம் விலகி பக்தியோடுகூடிய பாசம் மட்டுமே அவள் மேல் பெருகும்.

அவளோ ஏழைகளைக் கண்டால் கருணை மழை பொழிபவள். பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுத் தன்னைக் காப்பவர் யாரும் இல்லையா என்று ஏங்கித் தவிக்கும் பாமரனுக்கு உற்ற துணையாக நிற்பவள். அவர்களின் கண்ணீரைத் தன் கையில் ஏந்தி அதற்கு ஈடாக விலை பெற்றுத் தருபவள்.

வெக்காளி அம்மன்

சந்நிதி

இங்கு ஸ்ரீவல்லப கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி – தெய்வானை சமேத மயூர கந்தன், காத்தவராயன், புலி வாகன பெரியண்ணன், மதுரை வீரன், ஸ்ரீதுர்க்கை, பொங்கு சனீஸ்வரர் என பல சந்நிதிகள் உள்ளன.

கோரிக்கை

இங்கு வரும் பக்தர்கள், தங்களின் கோரிக்கைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி விண்ணப்பித்து வெக்காளியின் திருப்பாதங்களில் வைத்து வணங்கி, பிறகு அதை அங்குள்ள சூலத்தில் கட்டி வைப்பார்கள்.

அப்படி கட்டிய நாளில் இருந்து 40 நாள்களுக்குள் அன்னை அந்த வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை.

வெக்காளி கோயிலும் நானும் – நளினி

நடிகை நளினி வெக்காளி அம்மனின் தீவிர பக்தை. அவர் வெக்காளி அம்மனுடனான தன் ஆன்மிக அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘சீறும் சிங்கங்கள்’ படப்பிடிப்பு திருச்சிக்கு அருகே நடந்தது. அந்தப் படத்தில் காந்திமதி அம்மா என்னோடு நடித்தார்கள். அவர்கள் எப்போதும் ‘வெக்காளித்தாயே… வெக்காளித்தாயே’ என்று சொல்வார்கள்.

நான் அவர்களிடம், “அம்மா, யாரு அந்த வெக்காளி?” என்று கேட்டேன்.

“இதோ இங்கேதான் உறையூர்ல இருக்கா. அந்த அம்மனுக்குக் கூரை கிடையாது. ஆனா சக்தி வாய்ந்த அம்மா. என்ன கேட்டாலும் கொடுப்பா. அங்கே பிராது எழுதிக் கட்டினா உடனே நினைச்சது நடக்கும்” என்றார்.

எனக்கு ஆர்வம் அதிகரித்தது.

“அம்மா நாம ஒருநாள் போய்ட்டு வரலாமா…” என்று கேட்டேன்.

“போலாம். ஆனா சீக்கிரம் சூட்டிங் முடிச்சி இந்த புரொடெக்‌ஷன் மேனேஜர் விடணுமே…” என்றார். நான் மேனேஜரிடம் கேட்டேன். சம்மதித்தார்.

படப்பிடிப்புக் குழுவினர் சிலரோடு வெக்காளி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே அந்த அம்மாவை தரிசனம் செய்த காட்சியில் என்னையே மறந்துவிட்டேன். அப்படி ஒரு அழகு, கம்பீரம்.

நடிகை நளினி

கோரிக்கை வைத்து நடந்த திருமணம்

1987-ம் ஆண்டு எங்களுக்குத் திருமணம் நடந்தது. அவர் பெயர் குமரேசன். உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சினிமாவின் மீது தீராத காதல் அவருக்கு. பெரிய நடிகனாக வேண்டும் என்பது அவர் லட்சியம். திருமணம் ஆன முதல் நாள் இரவு அவரிடம் பல்வேறு விஷயங்களைப் பேசினேன்.

அப்போது, “ உங்களுக்கு நினைவிருக்கா… ஒரு முறை உறையூர் வெக்காளி கோயிலுக்குப் போனோம். அங்கே எல்லோரும் பிராது எழுதிக் கட்டினாங்க. நான் என்ன எழுதிக் கட்டினேன் தெரியுமா… நீங்கதான் எனக்கு மனைவியா வரணும்னு எழுதினேன். கேட்கிறதுதான் கேட்கிறோம் இந்த உலகத்தில் பெரிய விஷயம் எதுவோ அதையே கேட்கலாம்னு தோணிச்சி. அதான் அப்படி எழுதினேன். அந்தத் தாய் சக்தியுள்ளவள். என்ன கேட்டேனோ அதையே கொடுத்திருக்கா… இன்னைக்கு நீங்க எனக்கு மனைவியா அமைஞ்சது அந்தத் தாயோட கருணைதான்” என்றார்.

அந்தக் கணம் என்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. `மகிழ்ச்சியும் அழுகையும் ஒருசேரப் பொங்கியது. எனக்கு உடனடியாக அந்த வெக்காளியை தரிசனம் செய்வோம்’ என்று சொல்லி அவரை வற்புறுத்தினேன். அப்படியே உறையூருக்குச் சென்று தரிசனம் செய்தோம்.

அன்னையின் அருளால் இல் வாழ்க்கை நல் வாழ்க்கையானது. அந்த குமரேசன் தான் நடிகர் ராமராஜன் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

இன்றைக்கும் என்னிடம் ஏதேனும் பிரச்னை என்று யாரேனும் வந்தால் வெக்காளியிடம் வேண்டிக்கொள். சீக்கிரம் சரியாகும் என்றுதான் சொல்வேன். அப்படியே நடக்கும். இதெல்லாம் அந்தத் தாயின் கருணை” என்றார் நடிகை நளினி.

வெக்காளி அம்மனுக்கு ஆண்டுதோறும் அநேக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. பௌர்ணமியில் நடைபெறும் அபிஷேக வைபவம் அற்புதமான தரிசனம் எனலாம்.

அதுபோக, சித்திரை திருவிழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், ஆனி கடைசி வெள்ளியில் காய்கனிகள் அலங்கார வழிபாடு, .ஆடி வெள்ளியில் சிறப்புவைபவங்கள்.

ஆவணியில் சண்டிஹோமம், புரட்டாசியில் நவராத்திரி வழிபாடு, கார்த்திகையில் தீப விழா, தை பொங்கல் வழிபாடு, மாசி கடைசி ஞாயிறு லட்சார்ச்சனை, பங்குனி முதல் வெள்ளியில் அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா என இந்த ஆலயத்தில் கொண்டாட்டத்துக்கு குறைவே இல்லை எனலாம்.

வெக்காளியின் திருக்கோயிலை மிதித்தவர்களுக்கு வேதனை எதுவுமே அண்டாது என்பார்கள். தோஷங்கள் விலகும் தலம், பாவங்கள் தொலையும் தலம். புண்ணியங்கள் சேரும் தலம் வெக்காளியின் திருத்தலம். அன்னையின் திருவருளால் நாடும் வீடும் சகலமும் நலம் பெற்று வாழட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உறையூர் உள்ளது. அதிகாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest