tcr-kovil

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. யாக சாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாகசுர இன்னிசையும், பெண் ஓதுவார்கள் உள்பட 108 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெற்று வருகிறது.

ராஜகோபுரம்

இவ்விழாவிற்காக மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், திருக்கோயில் குடமுழுக்கை அனைத்து பகுதிகளிலும் காணும் வகையில் எல்இடி அகன்ற திரைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு, 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன. சாதாரணமாக திருக்கோயில்களில் மருந்து சாத்திய பிறகுதான் குடமுழுக்கு நடைபெறும். திருச்செந்தூர் திருக்கோயிலில் குடமுழுக்கு நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது மரபாக உள்ளது. குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

திருச்செந்தூர் கடற்கரை

07.07.2025 தொடங்கி 05.08.2025 வரை 30 நாட்கள் மண்டல பூஜையோடு திருக்கோயில் ஆவணித் திருவிழாவும் தொடங்குகின்றது. ஆகவே திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு இந்த நாட்களில் பக்தர்கள் எப்போது வந்து தரிசனம் செய்தாலும் குடமுழுக்கில் கலந்து கொள்ளுகின்ற புண்ணியம் கிடைக்கும். குடமுழுக்கை காண்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். திரும்பும் திசையெங்கும் முருக பக்தர்களும், அரோகரா கோஷமும் விண்ணை முட்டுகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest