
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அமைந்துள்ள ஜாப்ராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி சாலைகளில் சுற்றி திரிவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுமக்களை மட்டுமல்லாது ஆடு, கோழி போன்றவைகளையும் தெருநாய்கள் தாக்குவதால் அப்பகுதிகளில் தெருநாய் தொல்லை பெரும் பிரச்னையாக இருக்கிறது.

இதுபற்றி அப்பகுதி மக்கள், “தெருநாய்கள் ஒட்டுமொத்தமாக கூட்டமாக சுற்றுகின்றன.
இரவு நேரங்களில் சாலையில் செல்வோர்களையும், இருசக்கர வாகனங்களையும் கூட்டமாகத் துரத்துகின்றன.
ஆடுகள், கோழிகள் போன்றவற்றை தெருநாய்கள் தாக்குவதால் விவசாய குடும்பங்கள் பாதிக்கின்றன.
பொதுமக்களையும், முதியவர்களையும் நாய்கள் துரத்திக் கடிக்கின்றன” எனக் கூறுகின்றனர்.
இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஜாப்ராபாத் பகுதி மக்கள் கடந்த வாரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திரண்டு, “நாங்கள் இந்த நாய்களை வெறுக்கவில்லை. ஆனால், நம்மை பாதிக்கும் வகையில் இவை கட்டுப்பாடின்றி சுற்றித் திரிகின்றன.
சில சமயங்களில் மக்களின் உயிருக்கே ஆபத்தாக இருக்கிறது. தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்” என வலியுறுத்தினர்.

அதற்கு அதிகாரிகள், “தெரு நாய்கள் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால் அவற்றை பாதுகாப்பாக பிடித்து, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தனர்.
அதிகாரிகளின் இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து பொதுமக்கள், “விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தக்கட்டமாக போராட்டத்தில் இறங்குவோம்” என்றனர்.
இந்தியாவில் இன்று தெருநாய் பிரச்னை என்பது உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்கும் அளவுக்கு தீவிரமாக இருக்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வை எட்ட அரசு வேகமாக செயல்பட வேண்டும்.