WhatsApp-Image-2025-08-03-at-4.54.18-PM

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்பட்டுவரக்கூடிய `தோமினிக் சாவியோ’ மேல்நிலைப் பள்ளியில், மாணவர் விடுதியில் தங்கி பதினோராம் வகுப்புப் பயின்று வந்தார் முகிலன்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1) காலை 8.20 மணியிலிருந்து, மாணவன் முகிலனைக் காணவில்லை. அவர் வகுப்புக்கும் செல்லவில்லை; விடுதியிலிருந்தும் மாயமாகியிருந்தார். இது குறித்து, மாணவனின் பெற்றோரைத் தொடர்புகொண்டு பள்ளி நிர்வாகத்தினர் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

மகன் வீட்டுக்கும் வராததால், பதறிப்போன பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரித்திருக்கின்றனர். `பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை’ என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. முகிலன் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் மாயமான மாணவனைத் தேடத் தொடங்கினர்.

மாணவன் முகிலன்

இதையடுத்து, பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்தனர். அதில், மாயமானதாகக் கூறப்படும் அன்றைய தினம் பள்ளிக்குப் பின்புறமாக மாணவன் முகிலன் செல்வதைப் போன்ற காட்சி பதிவாகியிருந்ததையும் நேற்று இரவு கண்டுபிடித்தனர்.

இன்று காலை, பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பு கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றையும் பார்வையிட்டனர். அதற்குள் மாணவன் முகிலன் சடலமாக மிதந்ததைக் கண்டு அனைவருமே அதிர்ந்துபோயினர். தீயணைப்புத் துறை உதவியுடன் மாணவன் சடலத்தை மீட்டு போலீஸார் மேலே கொண்டுவந்தபோது, பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.

`முகப்பு மூடப்பட்ட கிணற்றுக்குள் மாணவன் விழுந்தது எப்படி?’ எனச் சந்தேகம் எழுப்பிய பெற்றோரும், உறவினர்களும் `மாணவன் சாவில் மர்மம் இருக்கிறது’ எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவன் குடும்பத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க உட்பட சில இயக்கத்தினரும் போராட்டத்தில் இறங்கினர்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் திரண்ட அ.தி.மு.க-வினர், `பள்ளி நிர்வாகத்தினரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என ஆவேசம் காட்டினர். திருப்பத்தூர் எஸ்.பி சியாமளா தேவி பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் போராட்டத்தைக் கைவிடவில்லை.

அப்போது, எஸ்.பி சியாமளா தேவியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, `ஸ்கூல காப்பாத்திடலாம்னு நினைக்காதீங்க. பள்ளி வளாகத்துக்குள் சம்பவம் நடந்துருக்கு. பள்ளி தாளாளரை விசாரிங்க. அவர்கள் தான் பொறுப்பு’ என்று கொதித்துப் பேசினார்.

`பள்ளி நிர்வாகத்தினர் மீது தவறு இருப்பதாகத் தெரியவந்தால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எஸ்.பி சியாமளா தேவியும் பதிலளித்தார். எஸ்.பி-யின் விளக்கத்தை ஏற்க மறுத்த அ.தி.மு.க-வினரும், போராட்டக்காரர்களும், `இதுவரை பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து யாரைப் பிடிச்சு விசாரிச்சிங்க..’ என்று கேள்வியெழுப்பி, கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால், பதற்றமான சூழல் தொற்றிக்கொண்டது.

மறியல் போராட்டம்

இதையடுத்து, வேலூர் எஸ்.பி மயில்வாகனனும் திருப்பத்தூர் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவன் முகிலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சம்பவ இடத்தில் தடய அறவியல் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. `மாணவன் கொலை செய்யப்பட்டு, சடலம் கிணற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம்’ என்கிற தகவலால் திருப்பத்தூரில் பரபரப்பான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸும் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்தொன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், “பள்ளி விடுதியில் தங்கிப் பயின்றுவந்த மாணவன் முகிலன் காணாமல்போன நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி வந்த காவலர்கள், பள்ளி வளாகத்திலிருக்கும் கிணற்றில் இருந்து மாணவன் உடலை மீட்டிருக்கின்றனர்.

முகிலனை இழந்த பெற்றோர் துயரத்தில் வாடும் நிலையில், அவர்களின் துயரத்தை மேலும் அதிகமாக்கும் வகையில் மாணவன் முகிலன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை முடிக்க முயற்சிகள் நடப்பது கண்டிக்கத்தக்கவை.

மாணவன் உடல் கண்டெடுக்கப்பட்ட கிணற்றின் முகப்பு இரும்புக் கம்பி வலையால் மூடப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி கிணற்றுக்குள் குதிப்பதோ, தவறி விழுவதோ சாத்தியமில்லை. அவ்வாறு இருக்கும்போது, `மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்’ என்று திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதன் பின்னணியில் யாரையோ காப்பாற்றும் எண்ணம் இருப்பது உறுதியாகிறது. மாணவனின் மர்ம மரணத்தில் தொடர்புடைய எவரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது.

கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றுக்குள் மிதக்கும் மாணவன் சடலம்

அண்மைக்காலங்களாகவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்தத் தொகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவந்த வேலூர் மாவட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் மர்மமாக உயிரிழந்தார்.

அதே பள்ளியில், ஜூன் மாதம் திருவள்ளூரைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவியும் மர்மமாக உயிரிழந்திருந்தார். அரசு பள்ளிகளில் இப்படியாக மர்ம மரணங்கள் தொடர்வது தடுக்கப்பட வேண்டும்.

திருப்பத்தூர் பள்ளி மாணவன் யுவராஜ் மட்டுமின்றி, மற்ற பள்ளிகளிலும் கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த மாணவர்களின் மர்ம மரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அத்துடன் மாணவன் முகிலனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest