சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான மனுவை திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் வழங்கியிருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனால், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டிருந்தது.
அதன்படி இன்று (டிச.9) திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ஒன்றாக இணைந்து நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் மக்களவையிலிருந்து குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும்.
இந்தக் குறைந்தபட்ச ஆதரவு எட்டப்பட்டு, தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அது முறையான விசாரணை நிலையை அடையும்.

அதன் பிறகு மூவர் குழு நியமிக்கப்பட்டு, அறிக்கை அளித்தவுடன் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கப்படும். அதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால்தான் அதுதொடர்புடைய தீர்மானத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.