mkstalin

திருப்பூர் மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 11) திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் உரையாற்றினார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “என்னதான் இருந்தாலும் உங்கள் மாவட்டத்துக்கு வந்துவிட்டு, திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் போக முடியுமா? சாமிநாதன் விடமாட்டார் – கயல்விழி செல்வராஜ் விடமாட்டார் – நீங்களும் விடமாட்டீர்கள். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சில அறிவிப்புக்களை வெளியிட விரும்புகிறேன்.

முதலாவது அறிவிப்பு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் அடுத்த கட்டமான,   நீராறு-நல்லாறு மற்றும் ஆனைமலையாறு திட்டமானது, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. அதை செயல்படுத்த, கேரள மாநில அரசிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.  நம்முடைய விவசாயிகளின் இந்த கனவுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். 

இரண்டாவது அறிவிப்பு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பாசனப்பகுதியில், பல வாய்க்கால்கள் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருப்பதாக  பாசன சங்கத் தலைவர்களும் – விவசாயிகளும் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று, வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்காக இந்த ஆண்டே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 

மூன்றாவது அறிவுப்பு

திருப்பூர் மாநகரத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கின்ற வகையில், நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலக கட்டடம் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.   திருப்பூர் மாநகராட்சி அமர்ஜோதி கார்டன் பகுதியில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்த,   பரஞ்சேர்வழி சிவன்மலை, கீரனூர் ஊராட்சிகளில் 11 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு

தாராபுரம் வட்டத்தில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில்,  நஞ்சியம்பாளையம் அருகே உப்பாற்றின் குறுக்கே,  7 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

ஆறாவது அறிவிப்பு

ஊத்துக்குளி வட்டத்தில் ஆறரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.  

ஏழாவது அறிவிப்பு

உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து சட்டத் துறை அமைச்சராக பதவி ஏற்று, உடுமலைப்பேட்டை அரசுக் கல்லூரி அமைக்க 25 ஏக்கர் நிலம் வழங்கியவருமான எஸ்.ஜே. சாதிக் பாட்சாவின் பெயரில், தாஜ் தியேட்டர் அருகில் இருக்கக்கூடிய சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்படும்!” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: வாக்குத் திருட்டு: தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி தடுத்து நிறுத்தம்!

Chief Minister Stalin has issued 7 new announcements for Tiruppur district.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest