WhatsApp-Image-2025-06-30-at-00.13.27-1

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).

ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகனான ஈஸ்வரமூர்த்தி-சித்திராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (28) என்பவருக்கும் கடந்த 11-ஆம் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின் அவிநாசியை அடுத்த பழங்கரையில் உள்ள கவின்குமார், ரிதன்யா தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், சேயூர் அருகே மொண்டிபாளையம் செல்லும் வழியில் சாலையோரம் காருக்குள் ரிதன்யா விஷம் அருந்திக் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

ரிதன்யா, கவின்குமார்
ரிதன்யா, கவின்குமார்

தற்கொலைக்கு முன் தனது தந்தை அண்ணாதுரைக்கு ரிதன்யா அனுப்பிய ஆடியோ தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, கணவர் வீட்டாரின் வரதட்சணைக் கொடுமை மற்றும் கணவர் கவின்குமார் உடல்ரீதியாக ரிதன்யாவைக் கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, கணவர் கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், கவின்குமாரின் தாய் சித்ராதேவியை போலீஸார் கைது செய்யவில்லை.

ரிதன்யா வீட்டாரின் தொடர் அழுத்தம் காரணமாக கவின்குமாரின் தாய் சித்ராதேவியும் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ரிதன்யா


ஜாமீன் கேட்டு மனு…

ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்படுவதற்கு முன்பே, ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலமாக உள்ள கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது.

ரிதன்யாவை உடல்ரீதியாக கணவர் கவின்குமார் கடுமையான சித்ரவதைகளைச் செய்துள்ளார். இது தெரிந்து அவர்களது பெற்றோர் கண்டிக்கவில்லை என ரிதன்யா தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சித்ராதேவியும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest