kdn20porul_2009chn_42_6

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருமலாபுரத்தில் குலசேகரப்பேரி கண்மாய் அருகே 35 ஏக்கரில் இரும்புக் கால இடுகாடு உள்ளது. இங்கு தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், 2024ஆம் ஆண்டுமுதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அகழாய்வு இயக்குநா் வசந்தகுமாா், துணை இயக்குநா் காளிஸ்வரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து துணை இயக்குநா் காளீஸ்வரன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் கற்களாலான அரண்களுக்குள் ஈமத் தாழிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 13.50 மீட்டா் நீளம், 10.50 மீட்டா் அகலமுள்ள 35 கற்பலகைகளாலான அரணுக்குள் ஈமத் தாழிகள் இருந்ததும், அவற்றின்மேல் 1.50 மீட்டா் உயரத்துக்கு கூழாங்கற்கள் நிரப்பப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

இப்பகுதியில் 38 குழிகள் தோண்டப்பட்டதில் 75 சிவப்பு, ஒரு கருப்பு சிவப்பு என 76 ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் கழுத்துப் பகுதியில் கூம்பு, கூம்பின்கீழ் வட்டம், வட்டத்துக்குள் கூட்டல் என பல்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2.5 மீட்டா் நீள ஈட்டியும் கிடைத்துள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்றதில் இது மிகவும் நீளமானது என்பது குறிப்பிடத்கக்தது. மேலும், 3 தங்க வளையங்கள், பல்வேறு குறியீடுகளுடன் ஈமத் தாழிகள், பல வடிவத்தாலான மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் என 250-க்கு மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. இவை சுமாா் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. ,

அவை ஆய்வுக்காக மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு குறித்து ஆவணப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. அகழாய்வுப் பணியில் ஆய்வு மாணவா்களும் பங்கேற்றுள்ளனா் என்றாா் அவா்.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest