
தில்லியில் பெய்து வரும் தொடர் கனமழையால், அம்மாநிலத்தில் 100-க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பருவமழை தீவிரமடைந்து, அங்குள்ள பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால், ரக்ஷா பந்தன் பண்டிகையான இன்று (ஆக.9) அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தில்லியின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்த தில்லிக்கும் இன்று, இந்திய வானிலை ஆய்வு மையம் ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 92 விமானங்கள் மற்றும் அங்கு வர வேண்டிய 13 விமானங்களும் தாமதமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், விமானங்கள் ரத்து செய்யப்படாத நிலையில், தாமதமான விமானங்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தில்லியில் விமானங்களின் இயக்கங்கள் தற்போது சீரான நிலையிலுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, விமான விவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு ஆலோசனைகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ராணுவ நடவடிக்கை! துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள் கொலை!