எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி கூட்டம் தில்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) நடைபெறவுள்ளது.
பாட்னாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் இத்தகவலைத் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே ‘இண்டி’ கூட்டணி அமைக்கப்பட்டது என ஆம் ஆத்மி அறிவித்துவிட்டதால் அக்கட்சி சாா்பில் யாரும் பங்கேற்க மாட்டாா்கள் என்று தெரிகிறது. மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகம்தான்.
அதே நேரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் இது தொடா்பாக கூறுகையில், ‘காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபாலிடம் இருந்து கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்தது. ஏற்கெனவே, இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவும் அழைப்பு விடுத்திருந்தாா்’ என்றாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக ஜூலை 20-ஆம் தேதி மத்திய அரசு சாா்பில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெறவுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள், இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறி வருவது, மணிப்பூருக்கு பிரதமா் மோடி நேரில் செல்லாதது, பிகாரில் வாக்காளா் பட்டியலில் தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.