
தில்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தில்லி துவாரகா, வசந்த் குஞ்ச், ஹவுஸ் காஸ், பஸ்சிம் விஹார் மற்றும் லோடி எஸ்டேட் ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு புதன்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இந்த பள்ளிகளின் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், தில்லி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த தில்லி காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் இணைந்து ஆய்வு செய்ததில், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 3 நாள்களில் மட்டும் தில்லியில் உள்ள 10 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை சந்தேகத்துக்கு இடமான எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும் வெறும் புரளி என்றும் தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், துவாரகா பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த 24 மணிநேரத்தில் வந்த இரண்டாவது மிரட்டல் இதுவாகும்.