தில்லி-என்சிஆரில் உள்ள பயன்படுத்தத் தகுதியற்ற (இஓஎல்) வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க

தடை விதிக்கும் உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நவம்பா் 1-ஆம் தேதிவரை காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) நீட்டித்துள்ளது.

தில்லி அரசு, இந்த உத்தரவை செயல்படுத்துவதில் தொழில்நுட்பம், செயல்பாட்டு சவால்கள் குறித்து எழுப்பிய கவலைகளைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆணையத்தின் 24ஆவது கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சட்டபூா்வ உத்தரவு எண். 89-இன் திருத்தப்பட்ட பிரிவின்படி, நவம்பா் 1, 2025 முதல் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியின் ஐந்து அதிக வாகன அடா்த்தி கொண்ட மாவட்டங்களான குருகிராம், ஃபரீதாபாத், காஜியாபாத், கௌதம் புத் நகா் மற்றும் சோனிபட் ஆகிய இடங்களில் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ஏஎன்பிஆா்) அமைப்புமுறைகள் அல்லது பிற வழிமுறைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட இஓஎல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கப்படும்.

என்சிஆரின் மீதமுள்ள பகுதிகளில் இந்த உத்தரவு ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என சிஏக்யூஎம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 3 மற்றும் ஜூலை 7ஆம் தேதியிட்ட கடிதத் தொடா்புகளில், அண்டை மாநில தரவுத்தளங்களுடன் ஏஎன்பிஆா் அமைப்பின் முழுமையற்ற ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப குறைபாடுகள் மற்றும் அமலாக்க சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தில்லி குறிப்பிட்டுள்ளது.

மோட்டாா் வாகனச் சட்டம், 1988இன் கீழ் புவியியல் முரண்பாடு குறித்த சட்டபூா்வ கவலைகளையும் அரசு எழுப்பியது. மேலும், வாகன உரிமையாளா்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களையும் அரசு எடுத்துரைத்திருந்தது.

சிஏக்யூஎம் இந்தக் கவலைகளை ஒப்புக்கொண்டது. மேலும், குறைபாடுகளை தடுக்க சீரான அமலாக்க காலக்கெடுவின் அவசியத்தை வலியுறுத்தியது. தகவல்தொடா்புகள் அமைப்புக்கும் அண்டை மாநிலங்களின் வாகன தரவுத்தளங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாததை எடுத்துக்காட்டின.

இஓஎல் வாகனங்கள், அதன் பதிவு நீக்கப்பட்டவுடன் தில்லிஎன்சிஆரில் சாலைப் பயன்பாட்டிற்கு சட்டவிரோதமானதாகும். அடையாளம் காணப்பட்டால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு நினைவூட்டப்பட்டது.

தில்லி மற்றும் என்சிஆா் மாநிலங்களின் போக்குவரத்துத் துறைகள் ஏஎன்பிஆா் அமைப்புமுறை சோதனைகளை விரைவுபடுத்தவும், பணியாளா் பயிற்சியை உறுதி செய்யவும், எரிபொருள் நிலைய ஆபரேட்டா்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணா்வு பிரசாரங்களைத் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இஓஎஸ் வாகன அகற்றுதல் குறித்த முன்னேற்றத்தை நிறுவனங்கள் மாதந்தோறும் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

இந்தத் திருத்தங்களை செயல்படுத்தல் இடைவெளிகளைத் தீா்க்க கூடுதல் நேரத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான சிஏக்யூஎம்இன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதாக உள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest