seoul-doct

சியோல்: தென் கொரியாவில் கடந்த 17 மாதங்களாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

தென் கொரிய அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள யூன் சுக் இயோல் அதிபராகப் பதவி வகித்தபோது, மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்கப்போவதாக கடந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்தார். இதனால் மருத்துவம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையும், அதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மருத்துவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டது. சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த எதிர்காலத்தில் மருத்துவ பணியாளர்கள் தேவை அதிகரிக்கும் என்பதால் மருத்துவ இடங்கள் அதிகரிப்பதாக அதிபர் மாளிகை தரப்பிலிருந்து கூறப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்புக்கு எதிராக மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் ஓரணியில் திரண்டனர். அவர்கள் அதிபரின் புதிய உத்தரவை திரும்பப்பெறக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவம் பயிலும் மாணவர்களுடன் கைகோத்து சுமார் 12,000 இளநிலை மருத்துவர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கொரிய சுகாதாரத் துறையில் அதன் தாக்கம் பெரியளவில் எதிரொலித்தது.

தென் கொரியாவின் புதிய அதிபராக லீ ஜே மியூங் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஜூனில் பதவியேற்றுக் கொண்டார். அவர் தேர்தல் பிரசாரத்தில் அறிவித்திருந்ததொரு வாக்குறுதியில் மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு உரிய தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி இப்போது அந்த பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அந்த உத்தரவை அமல்படுத்தப் போவதில்லை என்று தென் கொரிய அரசு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதையடுத்து சுமார் 8,300 மருத்துவ மாணவர்கள் மீண்டும் வகுப்புகளுக்கு திரும்பி தங்கள் படிப்பைத் தொடரப் போவதாக கொரிய மருத்துவ சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை(ஜூலை 14) தெரிவித்தார். மாணவர்களின் இந்த முடிவை அந்நாட்டின் பிரதமர் கிம் மின் சியோக் வரவேற்றுள்ளார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest