656b1e515701e

தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அப்போது, முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், “டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் உடனடியாக ஒரு தெருநாய் விடாமல் அனைத்தையும் பிடிக்க வேண்டும்.

இதற்காக அவர்கள் சிறப்பு படை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த தெருநாய்கள் பிடிக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளில் எந்த சமரசமும் செய்யப்படக்கூடாது. `தெருநாய்கள் இல்லாத சுற்றுப்புறம்’ என்பதை அடிப்படையாக வைத்து அதிக முக்கியத்துவம் வழங்கி இந்த விவகாரத்தை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், “யாரேனும் தனி நபர்களோ அல்லது விலங்குகள் நல அமைப்புகளோ இந்த நடவடிக்கைக்கு தடை செய்யும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளில் இந்த நீதிமன்றம் இறங்கும்” என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், “நாங்கள் இதை எங்களுக்காக செய்யவில்லை. இது பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயம்.

இதில் எந்த விதமான சென்டிமென்ட்டுக்கும் இடம் கிடையாது. விலங்குகள் நல ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்பாடுகள் எங்களுக்கு கோபத்தை கொடுக்கிறது.

ரேபிஸ் நோயினால் உயிரிழந்தவர்களை இந்த விலங்குகள் நல ஆர்வலர்களால் திருப்பிக் கொண்டு வர முடியுமா?” என்று கட்டமாக கேள்வியெழுப்பினர்.

தெருநாய்
தெருநாய்

அதுமட்டுமல்லாமல் நீதிபதிகள், “பிடிக்கப்படும் தெருநாய்கள் முடிந்த வரை பொதுமக்கள் அதிகம் இல்லாத இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

இவற்றில் ஒரு நாய்கூட எக்காரணத்தைக் கொண்டும் விடுவிக்கப்படக் கூடாது. பிடிக்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்துவது கருத்தடை செய்வது போன்றவற்றை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும்.

இதற்கான தேவையான கட்டமைப்புகளை எட்டு வார காலத்திற்குள் டெல்லி அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும்.

உத்தரவு

இந்த அனைத்து நாய்களும், பாதுகாப்பான இடங்களில் முழுமையான சிசிடிவி காட்சிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்.

எத்தனை நாய்கள் ஒரு நாளைக்கு பிடிக்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

ஒரு வார காலத்திற்குள் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் உருவாக்கப்பட்டு, எங்கெல்லாம் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி இருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest