gautham-ghambir

இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு விரைவில் இடம் கிடைக்கும் என தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதியளித்ததாக அவரது தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்திய அணியில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. இங்கிலாந்து தொடரிலும் ஒரு போட்டியில்கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சன் இருவருக்கும் மூன்றாவது வரிசையில் விளையாட இடம் வழங்கப்பட்டதால், அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டது. இருப்பினும், இருவரும் இணைந்து மொத்தமாக பந்து இன்னிங்ஸ்களில் தலா ஒரு அரைசதம் வீதம் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்தனர்.

இந்த நிலையில், தனது மகனுக்கு வாய்ப்பு கொடுப்பதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்ததாக அபிமன்யுவின் தந்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் பேசுகையில், “கௌதம் கம்பீர் என்னுடைய மகனிடம் பேசும்போது நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள். உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும். ஓரிரு போட்டிகளிலேயே உங்களை அணியில் இருந்து நான் நீக்கப்போவதில்லை. நான் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். இதைத் தான் என் மகன் என்னிடம் கூறினார்.

மொத்த பயிற்சியாளர் குழுவும் அவர் நன்றாக விளையாடுகிறார். அவருக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தனர். என்னுடைய மகன் 23 ஆண்டுகளாக கடினமாக உழைத்து வருகிறான். மேலும், அவன் இந்திய அணியில் வாய்ப்புக்காக 4 ஆண்டுகளாகக் காத்திருக்கிறான்.

பச்சைப் புல் நிறைந்த ஆடுகளங்களில், சாய் சுதர்சனைவிட அபிமன்யு ஈஸ்வரன் அதிகமுறை விளையாடிய அனுபவம் பெற்றவர். அதனால், முறையாக அவருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அபிமன்யுதான் 3-வது வரிசையில் விளையாடியிருக்க வேண்டும். இருந்தாலும், சாய் சுதர்சன் விளையாடியதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரும் எனக்குத் தெரிந்தவர் தான். ஆனால், அவர் 3-வது வரிசையில் பொருத்தமானவரா?, அவர் 4 இன்னிங்ஸில் 0, 31, 0, 61 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

பச்சைப் புல் ஆடுகளமாக ஈடன் கார்டனில் தன்னுடைய மொத்தப் போட்டிகளில் 30 சதவிகிதத்துக்கு அதிகமான போட்டிகளை விளையாடியுள்ள அபிமன்யுவை அவர்கள் விளையாட வைத்திருக்கலாம்.

இதுவரை 3-வது வரிசையில் விளையாடாத கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அபிமன்யுவுக்கு வழங்கப்படவில்லை. கருண் நாயர் ஒருபோதும் 3-வது வரிசையில் விளையாடவில்லை. அவர் 4 மற்றும் 5-வது வரிசையில் தான் விளையாடி வருகிறார்” என்றார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச தொடரில் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். அதன்பின்னர் இரண்டரை ஆண்டுகள் கடந்தும் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில், 15 வெவ்வேறு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

துலீப் டிராபி, ரஞ்சி டிராபி, இரானி கோப்பை என அனைத்து விதமான உள்ளூர்ப் போட்டிகளிலும் அபிமன்யு சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், இந்த சீசன்களில் 127*, 191, 116, 19, 157*, 13, 4, 200*, 72, 65 ரன்களையும் குவித்திருந்தார்.

29 வயதான அபிமன்யு, இதுவரை 103 போட்டிகளில் விளையாடி 27 சதங்கள், 31 அரைசதங்கள் உள்பட 7841 ரன்களை குவித்துள்ளார்.

இந்திய மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் அபிமன்யுவுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gautam Gambhir assured my son that he will get chances: Abhimanyu Easwaran’s father

இதையும் படிக்க : ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு கடும் சவால் காத்திருக்கிறது: கிளன் மெக்ராத்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest