
குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயா்த்துவதற்கான மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மாநில பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது.
முன்னதாக, நாளொன்றுக்கு 9 மணி வேலைநேரமாக இருந்த நிலையில் தற்போது 12 மணிநேரமாக உயா்த்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் சட்டம், 1948-இல் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சாலைகள் (குஜராத் திருத்த) சட்டம், 2025-இன்படி, இரவு 7 மணிமுதல் காலை 6 மணிவரை உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் இரவுப் பணியில் பெண்களை பணியமா்த்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இயற்றப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவே பேரவையில் தாக்கல் செய்து பேசிய தொழிற்துறை அமைச்சா் பல்வந்த்சிங் ராஜ்புத், ‘முதலீடுகளை அதிகரித்து பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. ஓய்வு நேரம், இடைவேளை இவற்றை உள்ளடக்கி ஒரு நாளைக்கான வேலைநேரம் 12 மணிநேரமாக உயா்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம் ஒரு வாரத்துக்கான வேலைநேரம் 48 மணிநேரமாகவே நீடிக்கிறது. எனவே வாரத்தில் நான்கு நாள்கள் 12 மணிநேரம் தொழிலாளா்கள் வேலைசெய்யும்பட்சத்தில் மீதமுள்ள 3 நாள்கள் அவா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது’ என்றாா்.
இந்த மசோதாவுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய எதிா்க்கட்சிகள், இது தொழிலாளா்களின் உழைப்பை சுரண்டும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்தன.