
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தனர்.
பின்னர், இந்த ஆண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆடிவிட்டு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இவ்விருவரும், ஐ.பி.எல் தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அடுத்தடுத்து அறிவித்தனர்.

இப்போது இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஆடி வரும் இந்திய அணி, அடுத்து டி20 வடிவில் நடக்கவிருக்கும் ஆசிய கோப்பையில் ஆடவிருப்பதால், அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில்தான் இருவரும் மீண்டும் இந்திய அணியில் விளையாடக்கூடும்.
ரோஹித் சர்மா ஏற்கெனவே 2027 அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என இலக்கு வைத்திருக்கிறார் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
ஆனால், அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால் இதற்கிடையில் எத்தனை ஒருநாள் போட்டிகளில் இவ்விருவரும் ஆடப்போகிறார்கள், ஒருநாள் உலகக் கோப்பையில் நிச்சயம் ஆடுவார்களா என்பது புதிராகத்தான் இருக்கிறது.
இந்த நிலையில், கோலியும், ரோஹித்தும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவது கடினம்தான் என தோனியை மேற்கோள்காட்டி ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

தனது யூடியூப் சேனனில் பேசிய ஹர்பஜன் சிங், ” 2027 ஒருநாள் உலகக் கோப்பை உண்மையில் மிகத் தொலைவில் இருக்கிறது.
அவர்கள் இருவரும் வேறு எந்த ஃபார்மெட்டிலும் (ODI தவிர) விளையாடுவதில்லை.
அப்படியிருக்கும்போது நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்தாலும் சரி அல்லது எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி இது மிகவும் கடினமாகிவிடும்.

நீங்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் விளையாட்டு உங்களைத் தாண்டி முன்னேறிக்கொண்டே போகும். நீங்கள் பின்தங்கியிருப்பீர்கள்.
ஐ.பி.எல்லில் கடந்த மூன்று ஆண்டுகளாக தோனியின் ஆட்டத்தைப் பாருங்கள்.
இப்போதிருக்கும் தோனிக்கும், 6 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்காகத் தொடர்ந்து விளையாடிய தோனிக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் காண்கிறீர்கள்” என்று கூறினார்.
2027 அக்டோபர், நவம்பரில் தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் ஆடுவார்களா என்பது குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.