PTI07282025000165B

இந்தியா முதலில் பாகிஸ்தானுடன் தோழமையையே முன்மொழிந்தது. ஆனால் அந்த நாடு அதை நிராகரித்தால் கையை முறிப்பது எப்படி என்பதும் நன்கு தெரியும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய சிந்தூர் தாக்குதல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் தொடங்கியது.

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்ததை உலகமே பார்த்தது. தோழமையை இந்தியா முன்மொழிந்தாலும், தேவைப்பட்டால் கையை முறிக்கும். பாகிஸ்தானுக்கு இருந்த சந்தேகங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீர்க்கப்பட்டன.

நாட்டின் பாதுகாப்க்காக உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். பயங்கரவாதத்துக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது. மிகுந்த பொறுப்புடன் நம் பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்டன. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை மட்டுமே இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கியது. 9 பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டன. வெறும் 22 நிமிடங்களில் தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது. பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவம் இறுதி மரியாதை செலுத்தியது. பாகிஸ்தான் டிரோன்களை நவீன வான் பாதுகாப்பு தொழில்நட்பங்களைக் கொண்டு தகர்த்தோம். பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுத்தோம். பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல், பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி. இந்திய வீரர்களின் வீரத்துக்கும் திறமைக்கும் வாழ்த்துகள். இந்திய வீரர்கள் நாட்டை மட்டும் பாதுகாக்கவில்லை. நாட்டின் தன்மானத்தையும் காத்துள்ளனர்.

பயங்கரவாதத்தை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. பதிலடி தர எப்போதும் இந்தியா தயாராக இருக்கும். ஆபரேஷன் சிந்தூர் நோக்கம் நிறைவேறியது. இலக்கை 100 சதவீதம் எட்டினோம். ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை. தேவைப்பட்டால் மீண்டும் தொடங்கும். இந்திய முப்படைகள் எந்தப் பின்னடைவையும் சந்திக்கவிலலை. எனவே, ஆபரேஷன் சிந்தூர் பற்றி யாரும் சந்தேகப்பட வேண்டாம். தேர்வில் வெற்றி பெற்றார்களா என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, தேர்வெழுதும்போது பென்சில் உடைந்ததா என பார்க்கக் கூடாது என்றார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest