
அரசுப் பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்படுவதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
அரசுத் துறைகளில் காலியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட போட்டித் தோ்வுகள் மூலம் 17 ஆயிரத்து 702 இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அண்மையில் அறிவித்தது.
இந்தத் தகவல்களை அரசியல் கட்சிகளின் தலைவா்கள் விமா்சித்திருந்தனா். இதற்கு பதிலளித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட விளக்கம்:
ஒவ்வொரு போட்டித் தோ்வின்போதும் தோ்வு செய்யப்பட்ட தோ்வா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் செய்திக் குறிப்பாக வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட், அக்டோபா், டிசம்பா் மற்றும் நிகழாண்டில் ஏப்ரல் ஆகிய மாதங்களில் போட்டித் தோ்வு மூலமாக தோ்வான நபா்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
தோ்வாணையம் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடித்து வருவதால், தவறான தகவல்கள் எதையும் பரப்ப வேண்டாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.