
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு பண மோசடி வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் ஜூலை 7-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
என்ன விவகாரம்?
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட இடத்தில் ரூ. 34.80 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
மகேஷ் பாபு விளம்பரப்படுத்தியதால் அந்நிறுவனம் மீதான நம்பகத்தன்மை வாடிக்கையாளர்களுக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தால் விற்கப்பட்ட இடத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி, பண மோசடியில் நடிகர் மகேஷ் பாபுவுக்கும் தொடர்பிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்டுள்ள பண மோசடி வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மகேஷ் பாபுவுக்கு கடந்த ஏப்ரலில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மகேஷ் பாபு ரூ. 5.90 கோடி பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடைபெறுகிறது.
ரியல் எஸ்டேட்டில் மோசடி திட்டங்களால் ரூ. 100 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், மேற்கண்ட நிறுவனங்கள் மீதான வழக்கும் ஒருபகுதியாக உள்ளது. எனினும், மகேஷ் பாபு மீது அமலாக்கத்துறையால் குற்ற வழக்கு இதுவரை பதியப்படவில்லை.
Mahesh Babu served legal notice over Rs. 34.8 lakh real estate scam