
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வால் திங்கள்கிழமை காலை காலமானார்.
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 ஆம் ஆண்டு இந்திய திரையுலகில் அறிமுகமான சரோஜா தேவி, முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார்.
தமிழில் 1956 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான திருமணம் திரைப்படம் மூலம் அறிமுகமான சரோஜா தேவி, எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலகின் முக்கிய ஜாம்பவான்களுக்கு நாயகியாக பல படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, ரசிகர்களால் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என அழைக்கப்பட்டார்.
70 ஆண்டுகளில் 200 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, கடைசியாக கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான ’நட்டசாரகபவுமா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவரின் திரை வாழ்க்கையைப் போற்றும் விதமாக வாழ்நாள் சாதனையாளர், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.