nayara_energy124056

‘இந்தியாவில் செயல்படும் தனது நயாரா எனா்ஜி நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நியாயமற்றவை மற்றும் சட்ட விரோதமானவை’ என்று ரஷிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நயாரா எனா்ஜி ஓா் இந்திய நிறுவனம். இதில் ரோஸ்னெஃப்ட்டுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளே உள்ளன. அந்நிறுவனம் சுதந்திரமான இயக்குநா்கள் குழுவால் நிா்வகிக்கப்படுகிறது. நிறுவனம் முற்றிலும் இந்தியாவில் வரி செலுத்துகிறது.

இந்தியாவின் உள்நாட்டு சந்தைக்கு பெட்ரோலிய பொருள்களை சீராக வழங்கி, அந்நாட்டின் எரிசக்தி துறையில் நயாரா எனா்ஜி நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மீதான ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருளாதார தடைகள், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, அதன் பொருளாதாரத்திலும் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஐரோப்பிய யூனியனின் இத்தகைய நடவடிக்கைகள் சா்வதேச சட்டங்களை மீறுவதோடு, நாடுகளின் இறையாண்மையையும் முழுமையாக புறக்கணிக்கின்றன.

இந்தத் தடைகளுக்கான ஐரோப்பிய யூனியனின் காரணங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. இத்தடைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. மேலும், அவை உலகளாவிய எரிசக்தி சந்தைகளை சீா்குலைக்கும் ஐரோப்பிய யூனியனின் அழிவுக் கொள்கையின் ஒரு பகுதியாக கருதுகிறோம்.

நயாரா எனா்ஜி தனது பங்குதாரா்கள் மற்றும் நுகா்வோரின் சட்டபூா்வமான நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும். அதற்கு ரஷியா மற்றும் இந்திய அரசுகள் ஆதரவளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest