
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 9 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சேகர் பாபு, பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் ஆவேசமடைந்தார்.
9 மணிக்கே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. 1:50 மணியளவில்தான் அமைச்சர் சேகர் பாபுவும் மேயர் பிரியாவும் பேச்சுவார்த்தையை முடித்து வெளியே வந்தனர். ‘பேச்சுவார்த்தை எப்படி போச்சு…’ என ஒரு பத்திரிகையாளர் கேட்க, ‘பேச்சுவார்த்தையா என்ன பேச்சுவார்த்தை…’ என கடுப்பான முகத்துடன் கேட்டார் சேகர்பாபு. ‘தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும்னு தேர்தல் வாக்குறுதி கொடுத்திங்களே…’ என ஒரு பத்திரிகையாளர் கேட்க, ‘இல்ல…நீங்க கொடுங்க..நாங்க கொடுத்த வாக்குறுதியை கொடுங்க…கொடுங்க…கொடுங்க…’ என அந்த பத்திரிகையாளர் மீது பாய்ந்தார்.

‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தாரே…’ என இன்னொரு செய்தியாளர் பாலோ அப் கேள்வியை போட அதற்கும் சேகர் பாபு டென்ஷன் ஆனார். ‘வாக்குறுதி கொடுக்கலை…நீங்க எந்த பிரஸ்ஸூ’ என கேட்டார். அவர், ‘நீலம்’ என சொல்ல, ‘நான் பத்திரிகையாளர்களைதான் சந்திக்கிறேன். உங்களை சந்திக்கலை…’ என வெடுக்கென கேள்வியை கட் செய்தார்.

மேற்கொண்டு பேசியவர், ‘அவங்களும் எங்க மக்கள்தான். எங்களோட ஊன், உடல் உயிரோட கலந்திருக்காங்க. அவங்க தரப்பு நியாயத்தை சொல்லிருக்காங்க. அரசால் என்ன செய்ய முடியும்னு நாங்க சொல்லிருக்கோம். நாளை மதியம் மீண்டும் சந்திக்கிறோம். பேசிவிட்டு இருதரப்பும் சேர்ந்தே உங்களை சந்திக்கிறோம்.’ என்றார்.