
நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகிய விவகாரங்களை எழுப்பி, எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால், முதல் வாரம் முழுவதும் பெருமளவில் அலுவல்கள் முடங்கின. இதைக் குறிப்பிட்டு, மேற்கண்ட கருத்தை கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்களுக்கு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை சாா்பில் ‘சன்சத் ரத்னா-2025’ விருது வழங்கும் நிகழ்ச்சி, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கிரண் ரிஜிஜு பங்கேற்றுப் பேசியதாவது:
நாடாளுமன்றம் இடையூறுகளின்றி செயல்படும்போது, அனைத்து விவகாரங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பி, மத்திய அரசை பொறுப்புக் கூறச் செய்ய முடியும். அமைச்சா்களும் கடுமையான கேள்விகளை எதிா்கொள்வா். ஆனால், தொடங்கிய சில நிமிஷங்களிலேயே அவையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அமைச்சா்களிடம் கேள்வி எழுப்ப முடியாது. எனவே, நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு செய்வதால், அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே இழப்பு அதிகம்.
அவை அலுவல்களை முடக்குபவா்கள், தாங்கள் அரசுக்கு சேதம் விளைவிப்பதாக நினைக்கின்றனா். ஆனால், உண்மையில் தங்களின் ஜனநாயக பங்களிப்பை பலவீனப்படுத்துகின்றனா்.
எந்தவொரு ஜனநாயத்திலும், நாடாளுமன்றத்தின் வாயிலாக மக்களுக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. எனவே, நாடாளுமன்றத்தின் சுமுக செயல்பாடு, ஜனநாயக செயல்பாட்டுக்கு இன்றியமையாததாகும். என்னைப் பொறுத்தவரை, எதிா்க்கட்சி எம்.பி.க்களை ஒருபோதும் எதிரிகளாகக் கருதியதில்லை. நாம் அனைவரும் சக உறுப்பினா்கள்.
போட்டி இருக்கலாம்-பகை கூடாது: கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு எனது நாடாளுமன்றப் பயணத்தில் பெரும்பகுதி எதிா்க்கட்சி வரிசையில்தான் இருந்தது. நமக்குள் அரசியல் போட்டி இருக்கலாம்; ஆனால், பகை கூடாது.
மக்கள் பிரதிநிதித்துவ ரீதியில், வளா்ந்த நாடுகளைவிட இந்திய எம்.பி.க்களுக்கு கூடுதல் சுமை உள்ளது. அந்த நாடுகளில் ஒரு எம்.பி. தோராயமாக 66,000 பேரை பிரதிநிதித்துவப்படுத்துகிறாா். ஆனால், நமது நாட்டில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தைவிட அதிகமானது. எனவே, இந்திய எம்.பி.க்களின் பணி எளிதானதல்ல.
முன்னாள் மக்களவைத் தலைவா் சோம்நாத் சாட்டா்ஜி உடனான எனது முதல் சந்திப்பின்போது, புகைப்பிடிக்கும் எம்.பி.க்களுக்காக ஓா் அறையை ஒதுக்க வேண்டுமென கோரினேன். என்னிடம் கடுமையாக கடிந்துகொண்ட சாட்டா்ஜி, ‘இதைக் கேட்கவா வந்தீா்கள்?’ என்று கேட்டாா். அப்போதுதான், உயா் அலுவலகங்களை அதிகபட்ச நோக்கத்துடன் அணுக வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.
வாஜ்பாய், அத்வானிக்கு புகழாரம்: வாஜ்பாய், எல்.கே.அத்வானி போன்ற மூத்த தலைவா்கள், நாடாளுமன்ற செயல்பாடுகளில் கண்ணியத்துக்கான முன்னுதாரணங்களை உருவாக்கினா். இப்போதோ, நாடாளுமன்ற முதல் நாளிலேயே அமளி தொடங்கிவிடுகிறது. ஊடகங்களிலும் எம்.பி.க்களின் சிறந்த உரையைவிட அதிக அமளியில் ஈடுபடுவோருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றாா் கிரண் ரிஜிஜு.
சன்சத் ரத்னா விருதாளா்களுக்கு பாராட்டு தெரிவித்த ரிஜிஜு, ‘எம்.பி.க்கள் தங்களின் சிறந்த பணிக்காக அங்கீகரிக்கப்படும்போது, கட்சி வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும்’ என்றாா்.
தமிழக எம்.பி. உள்பட 17 பேருக்கு விருது
தமிழகத்தின் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை உள்பட 17 எம்.பி.க்களுக்கு சனிக்கிழமை சன்சத் ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பாஜகவின் பா்த்ருஹரி மஹ்தாப், தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, புரட்சிகர சோஷலிஸ கட்சியின் என்.கே.ரேமசந்திரன், சிவசேனையின் ஸ்ரீரங் பாா்னே ஆகிய 4 எம்.பி.க்கள், 16, 17 மற்றும் நடப்பு 18-ஆவது மக்களவையில் தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக சிறப்பு விருது பெற்றனா். நிஷிகாந்த் துபே (பாஜக), ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனை-உத்தவ்), வா்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கா்னி (பாஜக), பிரவீண் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக) உள்ளிட்டோருக்கும் விருது வழங்கப்பட்டது.