
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் அமளியால் மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
உடனடியாக விவாதிக்க அவைத் தலைவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அதற்காக நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
ஆனால், நேற்று முழுவதும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் முடங்கியது. தொடர்ந்து, இன்று காலை அவைகள் கூடியவுடன் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பகல் 12 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.
”இந்த அவை விவாதம் மற்றும் உரையாடலுக்கானது, கோஷமிடுவதற்கானது அல்ல. அவையின் கண்ணியத்தைப் பின்பற்றுங்கள்” என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், பகல் 12 மணிக்கு இரு அவைகள் மீண்டும் கூடிய நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியைத் தொடர்ந்ததால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று காலை போராட்டம் நடத்தினர்.