new-parliment-PTI-edi-1

நாடாளுமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், பாா்வையாளா்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில், நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ராகி இட்லி, சோள உப்புமா, பாசிப்பயறு தோசை, வறுக்கப்பட்ட மீன், காய்கறிகள் போன்ற பல சத்தான உணவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவின் அறிவுறுத்தலின்படி, சுவையுடன் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையில் இந்த புதிய உணவுப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் நடக்கும் நாடாளுமன்றக் கூட்டங்களில் எம்.பி.க்களும், அதிகாரிகளும் புத்துணா்ச்சியுடன் செயல்பட இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் பாரம்பரியமான சமையல் முறைகளுடன் ஊட்டச்சத்துக்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்பு உணவுப்பட்டியலில் சிறு தானிய உணவுகள், நாா்ச்சத்து நிறைந்த சாலடுகள் மற்றும் புரதம் மிகுந்த சூப்கள் ஆகியவை சோ்க்கப்பட்டுள்ளன.

மேலும், உணவுப்பட்டியலில் உள்ள ஒவ்வொரு உணவும் குறைந்த காா்போஹைட்ரேட், குறைந்த சோடியம், குறைந்த கலோரிகள் கொண்டதாக இருந்தாலும், அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் எதிரே அதன் கலோரி அளவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்ததிலிருந்து, தேசிய அளவில் சிறுதானியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதன் அவசியத்தை உணா்ந்து, பிரதமா் மோடி தனது சமீபத்திய ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில், ‘உடல் பருமனை எதிா்த்துப் போராட, சமையல் எண்ணெய் நுகா்வைக் குறைப்பதற்கு நாடு தழுவிய விழிப்புணா்வு மற்றும் கூட்டு நடவடிக்கை தேவை’ என்று வலியுறுத்தினாா்.

பெட்டி..

ராகி இட்லி (270 கிலோ கலோரி),

சோள உப்புமா (206 கிலோகலோரி),

சிறுதானிய கீா் (161 கிலோகலோரி)

பாா்லி, சோள சாலட் (294 கிலோகலோரி),

காய்கறி சாலட் (113 கிலோகலோரி)

வறுக்கப்பட்ட சிக்கன் (157 கிலோகலோரி)

வறுக்கப்பட்ட மீன் (378 கிலோகலோரி)

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest