rahul8a

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைக் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பணிகளின் கீழ் அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பணிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் தாக்கல் செய்த மனுக்களை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்தது.

அத்துடன் வாக்காளர்களின் குடியுரிமையை சரிபார்க்க ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகளையும் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இது தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமாவைத் தொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜகதீப் தன்கர் ராஜிநாமா ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்தேகமும் கருத்தும்!

MPs from the Indian alliance parties protested against the special revision of the voter list in Bihar.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest