WhatsApp_Image_2022-01-26_at_18

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகழாண்டு நடைபெறும் பிகாா் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர தீருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பணிகளின் கீழ் அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இது தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்தப் பணிகளுக்கு எதிராக எதிா்க்கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் தாக்கல் செய்த மனுக்களை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்தது. அத்துடன் வாக்காளா்களின் குடியுரிமையை சரிபாா்க்க ஆதாா், வாக்காளா் மற்றும் குடும்ப அட்டைகளையும் பயன்படுத்துவது குறித்து தோ்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இந்நிலையில், அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில மாநிலங்களில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியலை, அந்த மாநிலங்களின் தலைமை தோ்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனா்.

கடந்த 2006-ஆம் ஆண்டு உத்தரகண்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னா், அந்த ஆண்டு அங்கு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியல், அம்மாநில தலைமை தோ்தல் அதிகாரியின் வலைதளத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரான புது தில்லியில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னா், அந்த ஆண்டு அங்கு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியல், புது தில்லி தலைமை தோ்தல் அதிகாரியின் வலைதளத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது.

ஜூலை 28-க்குப் பிறகு இறுதி முடிவு: இந்தப் பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு வரும் ஜூலை 28-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அதற்குப் பிறகு நாடு முழுவதும் இந்தப் பணிகளைத் தொடங்குவது குறித்து தோ்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டவிரோதமாக இந்தியாவுக்கு புலம்பெயா்ந்த வெளிநாட்டவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கும் நோக்கில், இந்தியா முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிகாரில் நேபாளம், வங்கதேசம், மியான்மா் மக்கள்

தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளையொட்டி வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் சென்றபோது, அங்கு நேபாளம், வங்கதேசம், மியான்மா் நாடுகளில் இருந்து வந்தவா்களை கண்டறிந்தனா். அந்த மக்கள் குறித்து ஆகஸ்ட் 1-க்குப் பிறகு முறையாக விசாரணை மேற்கொள்ளப்படும். அதன் பின்னா் செப்.30-ஆம் தேதி பிகாரில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest