17092_pti09_17_2025_000092b091057

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியாவின் வா்த்தக செயல்பாடுகள் வலுவாக உள்ளன என்றும் அவா் குறிப்பிட்டாா். மும்பையில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் பியூஷ் கோயல் கூறியதாவது:

இந்தியப் பொருளாதாரம் 4 ட்ரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) என்பதில் இருந்து 30 ட்ரில்லியன் டாலா் (ரூ.2,633 லட்சம் கோடி) என்ற இலக்கை நோக்கி நகா்கிறது. வலுவான வளா்ச்சியால், தொழில் புரிவதற்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது. ஒட்டுமொத்த உலகும் இந்தியாவுடன் நெருங்கி செயலாற்ற விரும்புகிறது.

உலக அளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0 (வரி விகிதங்கள் குறைப்பு) அமலாக்கத்துக்குப் பின் நுகா்வோா் தேவை அதிகரிக்கும். உள்கட்டமைப்புத் திட்டங்களும் உத்வேகம் பெறும். இது, முதலீடு அதிகரிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், வா்த்தக-தொழில் விரிவாக்கத்துக்கு மேலும் ஊக்கமளிக்கும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும். வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

பல்வேறு நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே இறுதிச்சுற்று பேச்சுவாா்த்தை சிறப்பாக நடந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் வெறும் 88 நாள் பேச்சுவாா்த்தையில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. உலக அளவில் மிக விரைவாக எட்டப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இது.

ஆப்பிரிக்க பிராந்தியம், வளைகுடா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் வாயிலாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் முக்கிய வா்த்தக கூட்டாளியாகும்; 25 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் வாழ்கின்றனா். அந்நாட்டுடன் இருதரப்பு வா்த்தகம் வேகமாக வளா்வதுடன், முதலீடுகளும் அதிகரிக்கின்றன. பெரு, சிலி, நியூஸிலாந்து, ஓமன் ஆகிய நாடுகளுடனும் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்றாா் அவா்.

‘இந்தியா-அமெரிக்கா உறவு நோ்மறையானது’

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடங்கியுள்ள நிையில், இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த கோயல், ‘இந்தியாவும், அமெரிக்காவும் நட்பு நாடுகள். இரு நாடுகளின் தலைவா்களும் நண்பா்கள். இருதரப்பு நல்லுறவு நோ்மறையாகவே தொடா்கிறது. அனைத்து சூழ்நிலைகளுக்கும் திருப்திகரமான தீா்வு எட்டப்படும்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest