
அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹிமாசல் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கடந்தாண்டு மக்களவை உறுப்பினரானார்.
இதனிடையே, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் நெருக்கடி நிலையினைப் பற்றி கங்கனா எடுத்த எமர்ஜென்சி திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.
சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்த்து வரும் கங்கனா, யூடியூப் சேனல் நேர்க்காணலில் அரசியல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அரசியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த கங்கனா,
“நான் அரசியல் வாழ்க்கையை ரசிக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். இது மிகவும் வித்தியாசமான சமூக சேவை போன்ற வேலை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததுகூட இல்லை.
நான் பெண்களின் உரிமைக்காக போராடியிருக்கிறேன். ஆனால் அது வேறு. ஒருவர் பாதாள சாக்கடை பிரச்னையெல்லாம் என்னிடம் வந்து கூறுகிறார். நான் ஒரு எம்பி., ஆனால் பஞ்சாயத்து அளவிலான பிரச்னைகளையெல்லாம் என்னிடம் கூறுகிறார்கள். எம்எல்ஏக்களிடம் கூறவேண்டிய சாலை பிரச்னைகளை எல்லாம் கூறுகிறார்கள், மாநில அரசின் கீழ் வருகிறது என்றால், உங்களிடம் இருக்கும் பணத்தை செலவு செய்யுங்கள் என்கிறார்கள்.” என்றார்.
மேலும், பிரதமராக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கங்கனா, ”அந்தப் பதவிக்கு போதுமான தகுதியுடைவராக என்னை நான் நினைக்கவில்லை. ஏனெனில், தான் சமூகப் பணி பின்னணியைக் கொண்டவர் அல்ல, மிகவும் சுயநலமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.