minister-sivasangar-2

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை தனது அலுவல்களில் ஒன்றாக வைத்துள்ளார். அந்த வகையில், கோவையில் உள்ள கொடீசியா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். பின்னர், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு தனது காரில் அரியலூர் நோக்கி சென்றுள்ளார். அப்படி, அவர் செல்லும் வழியில் கரூர் – மாயனூர் இடையே இருந்த ஒரு உணவகத்தில் காரை நிறுத்த சொல்லி, அமைச்சர் சிவசங்கர் அந்த கடையில் டீ குடித்துள்ளார். அப்போது, அந்த உணவகத்தில் அரசு பேருந்து ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் பயோ பிரேக் மற்றும் உணவு அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பேருந்தின் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். இதைப்பார்த்த அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்துள்ளார். ‘உரிய இடத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள்?. உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது?’ என்று கேட்டு இருக்கிறார். சிவசங்கர் வழக்கமாக அணியும் வெள்ளை சட்டை, வேஷ்டி என இல்லாமல் பேண்ட், சர்ட்டுடன் பயணியை போல இருந்ததால் அவரை அடையாளம் கண்டு கொள்ளாத டிரைவரும், கண்டக்டரும், ‘நீங்க யார்?. நீங்க ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க?. உங்களுக்கு நாங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும்?. உங்க வேலையை பாருங்க’ என்ற தொனியில் இருவரும் சொல்லி, அமைச்சரை அதிர வைத்தனர். உடனே அமைச்சர் சிவசங்கர், ‘நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா?’ எனக் கேட்டுள்ளார். அவரை நன்றாக உற்றுப் பார்த்த அவர்கள், அதன் பின்னரும், `நீங்க யாருன்னு தெரியவில்லையே?’ என பதிலளித்துள்ளனர்.

sivasangar inspection

அதற்கு அமைச்சர் சிவசங்கர், “நான் வேறு யாரும் இல்லை. உங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் தான். அரசு பேருந்துகளில் பயணிக்கும்போது அரசு நிர்ணயித்திருக்கும் விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்கும் கடைகளில் பேருந்தை ஏன் நிறுத்துகிறீர்கள் என்று பயணிகள் கேட்டால், அரசிடம் கேட்க சொல்கிறீர்களாம். உங்கள் இஷ்டத்திற்கு வண்டியை நிறுத்திவிட்டு, ஏதேனும் பிரச்னை வந்தால் அரசிடம் கேட்க சொல்கிறீர்கள். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், உங்களது தனிப்பட்ட லாபத்திற்காக அரசு அங்கீகாரம் பெறாத உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தி பயணிகளை அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவது சரிதானா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் போக்குவரத்து ஊழியர்களிடம் அவர்கள் எந்த டிப்போவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கேட்டறிந்ததுடன், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க, வண்டியை எடுத்துச் செல்லும்படி கூறிவிட்டுச் சென்றார். அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் பேசமுடியாமல் நின்ற போக்குவரத்து ஊழியர்கள், அவருடைய அறிவுரையை ஏற்று பேருந்துகளை எடுத்துச் சென்றனர். அமைச்சர் இரவு வேளையில் மேற்கொண்ட இந்த திடீர் ஆய்வு, அரசு போக்குவரத்து துறை ஊழியர்களிடையே ‘பரபர’ பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest