
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு புதுச்சத்திரம் அடுத்த ஏளூர் அருகே டிரைவர் விஜய் பள்ளி பஸ்சை ஓட்டி வந்துகொண்டிருந்தார். அப்போது ஏளூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் சரக்கு லாரியில், விஜய் ஓட்டி வந்த பஸ்சை நீண்ட நேரமாக முந்துவதற்கு முயற்சி செய்து உள்ளார். இதில் இரு வாகனமும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர்கள் விஜய், அரவிந்த் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளி பஸ்சில் இருந்து கீழே இறங்கி வந்த விஜய்யை, அரவிந்த் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த, விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அரவிந்தை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விஜய்யின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஷ் ஜோஷி உள்ளிட்ட போலீசார் விஜய்யின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த நிலையில் தனியார் பள்ளி பஸ் டிரைவரை தாக்கி கொலை செய்த அரவிந்தை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி பஸ் ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.