
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் அந்த நாய்க்குட்டிகளுடன் அவா்கள் விளையாடி நேரத்தை செலவிடவும் இந்த முன்னெடுப்பு வழிவகுக்கிறது.
ராஜீவ் காந்தி விமான நிலையத்தை நிா்வகிக்கும் ஜிஎம்ஆா் குழுமம் இந்த முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் விமானப் பயணத்தின்போது ஏற்படும் கவலையை மறந்து அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட4 நாய்க்குட்டிகள் மட்டுமே இந்த முன்னெடுப்பில் இடம்பெற்றுள்ளன. நாய்க்குட்டிகளின் செயல்பாடுகளை அவற்றின் பயிற்சியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். பயணிகளிடம் கருத்து கேட்ட பின் மேலும் சில நாய்க்குட்டிகளை இந்த முன்னெடுப்பில் ஈடுபடுத்த ஜிஎம்ஆா் குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே சமயம் விருப்பமுள்ள பயணிகள் மட்டுமே நாய்க்குட்டிகளுடன் விளையாட அனுமதிக்கப்படுகின்றனா்.
திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களின் முக்கியப் பகுதிகளில் இந்த நாய்க்குட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.